நகை, பணத்தை திருடியதாக 3-வது கணவருடன் பெண் கைது
வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியதாக 3-வது கணவருடன் பெண் கைது செய்யப்பட்டார். மேலும், இவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆவூர்,
வாகன சோதனை
திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மண்டையூர் முருகன் கோவில் அருகே நேற்று முன்தினம் மாத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் மதுபோதையில் இருந்தார். மேலும், அவருடன் வந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
3-வது திருமணம்
விசாரணையில் அவர் மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த டிரைவர் ராமு (வயது 32) என்பதும் அவருடன் வந்த பெண் நாகர்கோவில் டவுன் பகுதியை சேர்ந்த லதா (40) என்பதும் தெரியவந்தது. மேலும், லதா திருட்டில் ஈடுபட்டதால் அவரது முதல் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும், திருட்டு வழக்கில் லதா நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அங்கு திருட்டு வழக்கில் சிறையில் இருந்த ரெங்கநாதனுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் மற்றொரு வழக்கில் ரெங்கநாதன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைதொடர்ந்து மதுரை நரிமேடு பகுதிக்கு லதா வந்தபோது டிரைவர் ராமுவுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளை கண்காணித்து அந்த வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி வந்துள்ளனர்.
30 பவுன் நகைகள் பறிமுதல்
அதேபோல் மாத்தூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட வில்லாரோடை, சோழியகுடி, மண்டையூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட சின்னமூலிப்பட்டி, காரப்பட்டு காலனி மற்றும் விராலிமலை, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரிய வந்துள்ளது.
இதனைதொடர்ந்து கணவன்-மனைவி 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அறந்தாங்கி மற்றும் திருமயம் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story