திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது


திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 19 Dec 2021 12:41 AM IST (Updated: 19 Dec 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்தது.

திருவட்டார், 
திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்தது.
8 மாதங்களுக்கு பிறகு
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திற்பரப்பு அருவியில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அருவியில் குளிக்க நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 
தற்போது கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் தண்ணீர் வேகமாக விழும் பகுதியில் தடுப்புவேலி போடப்பட்டு, மிதமாக தண்ணீர் விழும் பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு வந்தனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும், அருவியின் மேல்பகுதியில் உள்ள படகு தளத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கூட்டம் அலைமோதியது
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், அய்யப்பனை சாமி தரிசனம் செய்துவிட்டு குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, சுசீந்திரம் போன்ற பகுதிகளுக்கு வருவது வழக்கம். இவ்வாறு வரும் அய்யப்ப பக்தர்கள் தற்போது திற்பரப்பு அருவிக்கும் வர தொடங்கியுள்ளனர். அவர்கள் அருவியில் புனித நீராடி அருகில் உள்ள மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனால், நேற்று திற்பரப்பு அருவியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அலைமோதியது.
இதையடுத்து கடைகளில் வியாபாரமும் மும்முரமாக நடந்தது. விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிக அளவில் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அருவிப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதல் போலீசாரை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story