குமரியில் பள்ளிகளை ஆய்வு செய்ய 30 குழுக்கள் அமைப்பு
நெல்லையில் பள்ளிக்கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் 1,230 பள்ளிகளை ஆய்வு செய்ய 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆய்வு பணியை தொடங்க உள்ளனர்.
நாகர்கோவில்,
நெல்லையில் பள்ளிக்கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் 1,230 பள்ளிகளை ஆய்வு செய்ய 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆய்வு பணியை தொடங்க உள்ளனர்.
பள்ளிகளில் ஆய்வு
நெல்லையில் நேற்று முன்தினம் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் (மேல்நிலைக்கல்வி) ராமசாமி குமரி மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
30 குழுவினர்
இதுதொடர்பாக குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நெல்லையில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 1,230 பள்ளிகளில் இந்த ஆய்வு பணிகள் நடைபெற இருக்கிறது. இதற்காக கலெக்டர் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய 30 குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வாரத்தில் நிறைவு
இந்த குழுவினர் தனித்தனியாக பிரிந்து நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலும் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆய்வு பணியை மேற்கொள்ள உள்ளனர். இவர்களை தவிர பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராமசாமியும் தனியாகச் சென்று ஆய்வு செய்ய இருக்கிறார். மேலும் குழுவினர் ஆய்வு மேற்கொள்வதையும் அவர் கண்காணிப்பார்.
குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கணக்கெடுத்ததில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சேதமடைந்த நிலையில் தனித்தனி கட்டிடங்களாக உள்ளன. அந்த பட்டியலும் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கட்டிடங்களை இடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் நடைபெறும் ஆய்வு ஒரு வாரத்தில் நிறைவு பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
இந்தநிலையில் நேற்று மாலை வருவாய்த்துறை, கல்வித் துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி, அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கினார். அப்போது குமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள வருவாய்த்துறை, கல்வித்துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை அலுவலர்களை கொண்ட குழுக்கள் வட்ட அளவில் அமைத்து ஆய்வு மேற்கொள்வது சம்பந்தமாகவும், ஆய்வு அறிக்கையை ஒரு வார காலத்திற்குள் தயார் செய்யவும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டிடங்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், பாதுகாப்பற்ற கட்டிடங்களில் பயிலும் மாணவர்களுக்கு மாற்று இடத்தில் வைத்து கல்வி கற்பித்தல் சம்பந்தமாகவும் அறிவுரை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, திட்ட அலுவலர் தனபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, கல்வி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story