ஆபத்தான நிலையில் 96 கட்டிடங்கள் அகற்றம்


ஆபத்தான நிலையில் 96 கட்டிடங்கள் அகற்றம்
x
தினத்தந்தி 19 Dec 2021 1:22 AM IST (Updated: 19 Dec 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள 96 கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளது என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள 96 கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளது என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
கலெக்டர் ஆய்வு
நெல்லை மாவட்டத்தில் பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானார்கள். இ்தையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பள்ளிகளில் உள்ள ஆபத்தான கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் பயன்படுத்தாமல் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள், சேதமடைந்த கட்டிங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தஞ்சை அண்ணாநகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள சத்துணவு மையத்தில் தயார் செய்யப்பட்டுள்ள உணவின் தரத்தினையும் அவர் ஆய்வு செய்தார்.
96 கட்டிடங்கள்
பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளில் உள்ள கழிவறை, சத்துணவு கூடம், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் 2 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 96 கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு அதனை இடிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதுகாப்பாக இடிக்க உத்தரவு
மேலும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைத்து துறைகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைந்துள்ள கட்டிடங்களை ஒரு வார காலத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய நிதிகளில் பள்ளி கட்டிடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடிக்கும் போது எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாதவாறு பாதுகாப்பாக இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார், மகளிர் திட்ட அலுவலர் பாலகணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story