முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உறவினர்களை தொந்தரவு செய்தது ஏன்?-போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
விசாரணை என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் உறவினர்களை தொந்தரவு செய்தது ஏன்? என்று போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரை,
விசாரணை என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் உறவினர்களை தொந்தரவு செய்தது ஏன்? என்று போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
துன்புறுத்தல்
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சகோதரி. கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு விசாரணைக்காக எனது மகன் வசந்தகுமார், ரமணா மற்றும் டிரைவர் ராஜ்குமார் ஆகியோர் சமீபத்தில் திருத்தங்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் துன்புறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மூவரிடமும் போலீசார் கையெழுத்து பெற்றுள்ளனர். விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்கின்றனர். எனவே முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் உறவினர் என்பதற்காக என்னையும், எனது மகன்கள் உள்ளிட்டவர்களை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
தொந்தரவு செய்தது ஏன்?
அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, முன்னாள் அமைச்சர் மீது சுமத்தப்பட்ட அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்காக அவரது குடும்ப உறவினர்களை போலீசார் பல்வேறு வகையில் தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே போலீசாரின் இந்த சட்ட விரோத நடவடிக்கைகளில் இருந்து அமைச்சரின் குடும்ப உறவினர்களை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதாடினார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, குற்றச்சாட்டுக்கு ஆளானவரை எப்படி வேண்டுமானாலும் தேடிக்கொள்ளுங்கள். விசாரணை செய்யுங்கள். ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்தது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பி விசாரணை செய்து கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு மீதான விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story