பணத்தகராறில் விவசாயியை கொன்று உடல் புதைப்பு - நண்பர் கைது
துமகூரு அருகே, பணத்தகராறில் விவசாயியை கொன்று உடலை புதைத்த நண்பர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
துமகூரு:
நண்பரிடம் விசாரணை
துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா எம்.கொல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கண்ணா(வயது 48). விவசாயி. கடந்த 12-ந் தேதி வெளியே சென்று வருவதாக மனைவி பாக்யம்மாவிடம் கூறிவிட்டு லிங்கண்ணா வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்யம்மா, லிங்கண்ணாவை பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் லிங்கண்ணா மாயமாகி விட்டதாக பாக்யம்மா கோரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் மாயமான லிங்கண்ணாவை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் லிங்கண்ணாவுக்கும், அவரது நண்பரான பசவராஜ் என்பவருக்கும் இடையே பணத்தகராறு இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் பசவராஜை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
கொன்று புதைப்பு
அப்போது லிங்கண்ணாவை கொலை செய்து அவரது உடலை குழிதோண்டி புதைத்து விட்டதாக போலீசாரிடம் பசவராஜ் கூறினார். அவர் கூறியதை கேட்டு அதிர்ந்த போலீசார் உடனடியாக பசவராஜை கைது செய்தனர். மேற்கொண்டு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது லிங்கண்ணாவிடம், பசவராஜ் ரூ.3½ லட்சம் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவர் திரும்ப தரவில்லை. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
இதனால் லிங்கண்ணா மீது கோபத்தில் இருந்த பசவராஜ் அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 12-ந் தேதி லிங்கண்ணாவை அழைத்து சென்ற பசவராஜ், அவரை அடித்து கொலை செய்தததுடன், உடலை குழிதோண்டி புதைத்ததும் அம்பலமாகி உள்ளது. கைதான பசவராஜ் மீது கோரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story