சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி: நெல்லை தனியார் பள்ளியில் கல்வி அதிகாரிகள் நேரில் விசாரணை
நெல்லையில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சாப்டர் பள்ளிக்கூடத்தில் கல்வி அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை பொருட்காட்சி திடல் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் அன்பழகன், சுதீஷ், விஸ்வரஞ்சன் ஆகிய 3 மாணவர்கள் பலியானார்கள். 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதுபற்றி விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வி அதிகாரிகள் விசாரணை
இதையடுத்து சுவர் இடிந்து விழுந்த சாப்டர் பள்ளிக்கு நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, உதவி கலெக்டர் சந்திரசேகர் மற்றும் மருத்துவ அதிகாரிகள், கல்வித்துறையினர் சென்றனர். அங்கு சுவர் இடிந்து விழுந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் பள்ளி வளாகம் குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி கூறுகையில், ‘‘3 மாணவர்கள் பலியான இடத்தை பார்வையிட்டோம். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
18 குழுக்கள் அமைப்பு
இதற்கிடையே, பள்ளிக்கூடங்களில் கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, நெல்லை மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்களில் ஆய்வு செய்ய 18 குழுக்களை கலெக்டர் விஷ்ணு அமைத்துள்ளார்.
இந்த குழுவினர் எப்படி ஆய்வு நடத்த வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் கலெக்டர் விஷ்ணு, மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மற்றும் 18 குழுவை சேர்ந்த அதிகாரிகள், என்ஜினீயர்கள் கலந்து கொண்டனர்.
1,535 பள்ளிகள்
இதைத்தொடர்ந்து குழு அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று நேற்றே ஆய்வு பணியை தொடங்கினர். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) இந்த குழுவினர் தொடர்ந்து ஆய்வு நடத்துகிறார்கள். மொத்தம் 1,535 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. 2 நாட்கள் ஆய்வுக்கு பிறகு அனைத்து பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் நிைலமை, இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள், பராமரிப்பு மேற்கொள்ள வேண்டிய கட்டிடங்கள் குறித்து கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்களை கொண்ட 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் நெல்லை மாநகர பகுதியில் 4 குழுக்களும், ஊரக பகுதிகளில் 14 குழுக்களும் ஆய்வு செய்கிறது’’ என்று கூறிஉள்ளார்.
Related Tags :
Next Story