சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான வழக்கு: கைதான பள்ளி தாளாளர் உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு


சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான வழக்கு: கைதான பள்ளி தாளாளர் உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 19 Dec 2021 2:24 AM IST (Updated: 19 Dec 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான வழக்கு தொடர்பாக கைதான பள்ளி தாளாளர், கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமை ஆசிரியை நெஞ்சுவலி காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நெல்லை:
நெல்லை எஸ்.என்.ஹைரோடு பொருட்காட்சி திடல் எதிரே உள்ள அரசு உதவி பெறும் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி அன்பழகன், சுதீஷ், விஸ்வரஞ்சன் ஆகிய 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

3 பேர் கைது

இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கூட வகுப்பறைகள் சூறையாடப்பட்டன. மாணவர்கள், பல்ேவறு அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி பள்ளி தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி, கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பின்னர் தாளாளர் செல்வகுமார், கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோர் ெநல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ஜெய்கணேஷ், 2 பேரையும் வருகிற 31-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, அவர்களை போலீசார் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைந்தனர்.

இதற்கிடையே, தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். உடனே அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

நீதிபதி விசாரணை

இந்த நிலையில் நீதிபதி ஜெய்கணேஷ் நேற்று காலையில் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வியை பார்த்து உடல் நிலை குறித்து விசாரித்தார். பின்னர் அவரை வருகிற 31-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். உடல் நலம் சரியான பின்னர் அவர் கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அடைக்கப்படுவார்.

கைதான 3 பேர் மீதும் 304-ஏ சட்டப்பிரிவின் கீழ் நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதாவது, கொலையாகாத மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

காலவரையின்றி விடுமுறை

இதற்கிடையே, பள்ளியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு கேட் மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து பள்ளி வளாகம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

அங்கு 2-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளிக்கூடமும் மறுஉத்தரவு வரும் வரை காலவரையின்றி மூடப்படுவதாக கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு நோட்டீசு பள்ளி முகப்பு சுவரில் ஒட்டப்பட்டு உள்ளது.

Next Story