நெல்லையில் 10 ஆஸ்பத்திரிகளில் ‘இன்னுயிர் காப்போம் திட்டம்’ தொடக்கம்
நெல்லை மாவட்டத்தில் 10 ஆஸ்பத்திரிகளில் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.
நெல்லை:
விபத்துகளில் சிக்குவோரை உடனே காக்கும் வகையில், ‘இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும்-48’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மேல்மருவத்தூரில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெல்லை வண்ணார்பேட்டை கேலக்ஸி ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அடையாள அட்டை
அதன்பிறகு நெல்லை மாவட்டத்தில் 10 ஆஸ்பத்திரிகளில் இன்னுயிர் காப்போம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் 3 பயனாளிகளுக்கு அடையாள அட்டையும் வழங்கினார். பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-
உயர்தர அவசர சிகிச்சை
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காக்கும் வகையில், அவர்களுக்கு 48 மணி நேரத்துக்கான உயர்தர அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்று கொள்ளும் வகையில், இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த திட்டம் ஆகும். தமிழகத்தில் யார் விபத்தில் சிக்கினாலும் உடனே அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று உயிரை காப்பாற்ற இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் வெங்கட ரெங்கன், கேலக்ஸி ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆவுடையப்பன், பாலசுப்பிரமணியன், பக்தவத்சலம், மகபூப் சுபுஹானி மற்றும் மாவட்ட மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர் வெங்கடாசலபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆஸ்பத்திரிகள் விவரம்
நெல்லை மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் முதலாவதாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி இடம்பெற்றுள்ளது.
மேலும் 9 தனியார் ஆஸ்பத்திரிகளான கேலக்ஸி, டாக்டர் வேலன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பாலாஜி மருத்துவமனை, கிருஷ்ணா மகப்பேறு மருத்துவமனை, பார்வதி நர்சிங் ஹோம், பீஸ் ஹெல்த் சென்டர், சந்தோஷ் மருத்துவமனை, ஷிபா மருத்துவமனை, சுதர்சன் பிளாட்டினம் மருத்துவமனை ஆகியவையும் இணைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story