இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் ஜனநாயக முறைப்படி உள்கட்சி தேர்தலை நடத்தியது அ.தி.மு.க. தான்-எடப்பாடி பழனிசாமி பேச்சு


இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் ஜனநாயக முறைப்படி உள்கட்சி தேர்தலை நடத்தியது அ.தி.மு.க. தான்-எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 19 Dec 2021 2:58 AM IST (Updated: 19 Dec 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் ஜனநாயக முறைப்படி உள்கட்சி தேர்தலை நடத்தியது அ.தி.மு.க. தான் என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம்:
இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் ஜனநாயக முறைப்படி உள்கட்சி தேர்தலை நடத்தியது அ.தி.மு.க. தான் என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஆலோசனை கூட்டம்
கோவை மாவட்டத்தில் நடைபெறும் உள்கட்சி தேர்தல் மற்றும் பேரூராட்சி வார்டு செயலாளர்கள் தேர்தலில் தேர்தல் ஆணையாளர் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்களாக சேலம் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். 
அப்போது அவர் கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-
நல்ல வரவேற்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் கட்சி அமைப்பு தேர்தலை முதன்முதலில் நடத்தி முடித்தது சேலம் புறநகர் மாவட்டம் தான். அதற்காக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே போல் தி.மு.க.வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி கொடுத்ததற்கும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க. நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம். 
அடித்தட்டு மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும்தான் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார். அவரது வழியில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தனது உயிர் இருக்கும்வரை அ.தி.மு.க.வை வழிநடத்தியவர் ஜெயலலிதா. அவர், தனக்கு பின்னும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் வாழும் என்று தெரிவித்தவர்.
ஜனநாயக முறைப்படி...
அ.தி.மு.க. ஜனநாயக கட்சி. சாதி, மதத்திற்கு அப்பாற்ப்பட்ட கட்சி. இந்திய அளவில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் ஜனநாயக முறைப்படி உள்கட்சி தேர்தல் நடத்தியது அ.தி.மு.க. தான். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் போல் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, 1½ கோடி தொண்டர்களின் உறுப்பினர் பட்டியலை  வெளியிட்டுள்ளோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மணி, சித்ரா, நல்லதம்பி, ஜெய்சங்கர், சுந்தர்ராஜன், ராஜமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், ஓமலூர் ஒன்றிய செயலாளர்கள் அசோகன், ராஜேந்திரன், கோவிந்தராஜ், காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் சேரன் செங்குட்டுவன், சுப்பிரமணியம், தாரமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமுத்து, நகர செயலாளர்கள் சரவணன், கோவிந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story