வாரிசு அடிப்படையில் வேலை கிடைத்த 8 நாளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை


வாரிசு அடிப்படையில் வேலை கிடைத்த 8 நாளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Dec 2021 3:03 AM IST (Updated: 19 Dec 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

வாரிசு அடிப்படையில் வேலை கிடைத்த 8 நாளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 37). இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஈஸ்வரனின் தாயார் சேலம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி இறந்து விட்டார். இதனால் வாரிசு அடிப்படையில் ஈஸ்வரனுக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு துப்புரவு வேலை கிடைத்தது.
இதையடுத்து 35-வது வார்டு பகுதியில் அவர் ஓரிரு நாட்கள் வேலை பார்த்துள்ளார். ஈஸ்வரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈஸ்வரன் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. இதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த ஈஸ்வரன் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாரிசு அடிப்படையில் வேலை கிடைத்த 8 நாட்களிலேயே மாநகராட்சி துப்புரவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story