கோவிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட 5 பவுன் நகைகள்- உண்டியல் பணம் திருட்டு


கோவிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட 5 பவுன் நகைகள்- உண்டியல் பணம் திருட்டு
x
தினத்தந்தி 19 Dec 2021 3:07 AM IST (Updated: 19 Dec 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

கோவிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட 5 பவுன் நகைகள்- உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

செந்துறை:

நகை- பணம் திருட்டு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் தெற்குப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பச்சை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு இணையான சக்திவாய்ந்த கோவிலாக இப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். இதனால் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு தங்கத்தாலி காசு உள்ளிட்ட நகைகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி கடந்த 5 ஆண்டுகளாக அம்மனுக்கு சுமார் 5 பவுன் நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அவை அனைத்தும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பக்தர்களின் காணிக்கை உண்டியலில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அம்மனுக்கு அணிவித்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் அங்கிருந்த உண்டியலை உடைத்து தூக்கி சென்றனர். அந்த உண்டியல் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகல்குழி கிராமத்தில் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. நகை மற்றும் பணத்துடன் மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து கிராம மக்கள் மற்றும் பூசாரிகள் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ேமலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. உண்டியலில் சுமார் ரூ.15 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊருக்கு நடுவே உள்ள கோவிலில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story