ஓடையில் புதைந்த நிலையில் பெண் பிணம்
ஓடையில் புதைந்த நிலையில் பெண் பிணமாக கிடந்தார்.
தா.பழூர்:
ஓடையில் பெண் பிணம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அமிர்தராயன்கோட்டை- அணைக்குடம் கிராமங்களுக்கு இடையே வயல்வெளி பகுதியில் பாட்டா கோவில் ஓடை உள்ளது. நேற்று அப்பகுதியில் விவசாயிகள் உழவு பணியில் ஈடுபட்டிருந்த போது சிதைந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த கை ஒன்றை ஒரு நாய் கவ்விக்கொண்டு ஓடி வருவதை பார்த்தனர். நாய் வந்த திசையில் சென்று பார்த்தபோது ஓடையின் ஒரு பகுதியில் ஒரு பெண்ணின் உடல் அரைகுறையாக புதைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சோழமாதேவி கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் ஆகியோர் விரைந்து வந்தனர். பெண்ணின் உடல் மீதிருந்த புடவையை கொண்டு விசாரித்தபோது, அந்த புடவை அமிர்தராயன்கோட்டை கிராமத்தை சேர்ந்த காமாட்சி(வயது 85) என்ற மூதாட்டியினுடையது என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.
மூதாட்டியா?
காமாட்சிக்கு 3 மகள்களும், 2 மகன்கள் உண்டு. இதில் ஒரு மகன் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு மகனான செல்வம் அமிர்தராயன்கோட்டை கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காமாட்சி அமிர்தராயன்கோட்டை கிராமத்தில் இருந்து காணாமல் போய்விட்டதாகவும், தற்போது சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளவர் மீது உள்ள புடவை காமாட்சியின் புடவைதான் என்றும் காமாட்சியின் மகள் சுமதி என்பவர் உறுதிப்படுத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தை ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் மூதாட்டி காமாட்சி மற்றும் அவரது மகள் சுமதி ஆகியோருக்கு வயல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் பிணமாக புதைந்திருப்பது காமாட்சி தானா? அல்லது வேறு யாராவதா? 15 நாட்களுக்கு முன்பு காமாட்சி அவரது வயலுக்கு சென்றபோது ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்து விட்டாரா? அல்லது யாராவது காமாட்சியை கொலை செய்து அந்த இடத்தில் புதைத்தனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று பிரேத பரிசோதனை
இந்நிலையில் நேற்று மாலை இருள் சூழ்ந்துவிட்டதால் புதைந்த நிலையில் இருந்த உடலை தோண்டி எடுக்கும் பணிகள் நடைபெறவில்லை. இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது. பிரேத பரிசோதனையின் முடிவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் வயது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிறகே இறந்தவர் யார்? இறந்தது எப்படி? என்பது உள்ளிட்ட பல்வேறு வினாக்களுக்கு விடை தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story