பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த வழக்கில் மருமகன்-மாமியார் கைது
பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த வழக்கில் மருமகன்-மாமியார் கைது செய்யப்பட்டனர்.
வேப்பந்தட்டை:
முகவரி கேட்பதுபோல்...
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பழைய ஆஸ்பத்திரி சாலையில் வசித்து வருபவர் ராஜா. இவரது மனைவி மகாலட்சுமி(வயது 28). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, வாலிபர் ஒருவர் முகவரி கேட்பதுபோல் வீட்டிற்கு வந்தார். அவர் திடீரென மகாலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக மகாலட்சுமி அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
கைது
அதன் அடிப்படையில் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இப்ராஹிம்(வயது 20) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் மகாலட்சுமியிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்றது அவர்தான் என்பதும், தங்கச்சங்கிலியை அரும்பாவூரில் உள்ள அவரது மாமியார் அஞ்சலை(37) என்பவரிடம் கொடுத்து மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தங்கச்சங்கிலியை மீட்ட போலீசார், இப்ராஹிம், அஞ்சலை ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story