பேட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
பேட்டையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டை:
நெல்லை பேட்டை அருகே சத்யா நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் 63 பேருக்கு தனி வீடுகளும், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அப்புறப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கு இரண்டு தளங்களில் 144 வீடுகளும், டவுன், பேட்டை, பழைய பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாடகை வீடுகளில் வசித்தவர்களுக்கு நான்கு தளங்களில் 432 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பேட்டை-சேரன்மாதேவி சாலையில் இருந்து சத்யா நகருக்கு செல்லும் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிலான குறுக்குச்சாலை பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவு பெறாத நிலையில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தெருவிளக்கு வசதியும் சரிவர இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பேட்டை-சேரன்மாதேவி சாலை சத்யா நகரை இணைக்கும் குறுக்குச்சாலையில் நேற்று திடீரென திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story