கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி
ஆலங்குளத்தில் கிணற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பரும்பு நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளி. இவருடைய மகன் ஜெயராம் (வயது 13). இவன் பக்கத்து ஊரான நல்லூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் 2 நண்பர்களுடன் குளிக்க சென்றான். ஜெயராம் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினான்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் ஓடிச் சென்று ஜெயராமின் வீட்டில் தெரிவித்தனர். இதுகுறித்து ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி ஜெயராமை தேடினர். அப்போது ஜெயராமை பிணமாகவே மீட்க முடிந்தது.
இறந்த சிறுவனின் உடலை ஆலங்குளம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குளத்தில் கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story