அபூர்வ மரகத நடராஜர் சிலையில் சந்தனம் களையப்பட்டது
ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டு இருந்த சந்தனகாப்பு களையப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டு இருந்த சந்தனகாப்பு களையப்பட்டது.
முதல் கோவில்
ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான திருஉத்தர கோசமங்கை திருக்கோவில். உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற பெருமை உடைய இந்த கோவிலில் மங்களநாதர், மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். மேலும், இங்கு நடராஜருக்கு தனிசன்னதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நடராஜர் சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது. மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து காப்பதற்காக மரகத நடராஜர் சிலை மீது ஆண்டு முழுவதும் சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும். வருடத்தில் ஒருநாள் சிவனுக்கு உகந்த நாளான திருவா திரைக்கு முதல்நாள் இந்த சந்தன காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவது வழக்கம்.
சந்தனகாப்பு களைப்பு
இதன்படி நேற்று ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜர் மீது பூசப்பட்டு இருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று நடராஜர் மீது பூசப்பட்டு இருந்த சந்தன காப்பு களையப்பட்டது.
அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து மரகத நடராஜருக்கு சந்தனாதி, நெய், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், நெல்லிபொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 32 வகையான அபிசஷகங்கள் நடைபெற்றன.
மருத்துவகுணம்
ஆபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் மிகுந்தது என கருதப்படுவதால் இந்த சந்தனத்தை பக்தர்கள் வாங்கி சென்றனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு இருந்தன. பக்தர்கள் அனைவரும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து முககவசத்துடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் நின்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சந்தனம் களையப்பட்ட அபூர்வ பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.
ஏற்பாடு
வெளியூர் பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதிலும் அதிகஅளவில் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கட்டண தரிசனம் செய்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி ராஜராஜேஸ்வரி உத்தரவின் பேரில் திவான் பழனிவேல்பாண்டியன் தலைமையிலான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். காலை சந்தனக்காப்பு களைந்தது முதல் இரவு மீண்டும் சந்தன காப்பு பூசும் வரை பக்தர்கள் வரிசையில் நின்று அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.
மீண்டும் சந்தனகாப்பு
விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விழாவின் நிறைவாக இன்று (திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதி காலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் அருணோதய காலத்தில் அபூர்வ மரகத நடராஜரின் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடராஜருக்கு பல்வேறு ஆராதனைகள் நடத்தப்படும்.
Related Tags :
Next Story