தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்காலத்தை நீட்டிக்க கோரிக்கை
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிக்காலத்தை இம்மாத இறுதிவரை நீட்டிக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிக்காலத்தை இம்மாத இறுதிவரை நீட்டிக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தற்காலிக மருத்துவர்கள்
இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் கொரோனா நோய் தடுப்பு பணிக்கான தற்காலிக மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
அங்கு கலெக்டர் செந்தில்ராஜிடம் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
மருத்துவர்கள்-செவிலியர்கள்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையில் இருந்து மக்களை பாதுகாத்திடும் பொருட்டு அரசு சார்பில் அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 50 மருத்துவர்கள், 76 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பணி புரிந்து வந்தோம். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்துடன் எங்களுக்கான பணிக்காலம் முடிவுற்றதாக அரசு அறிவித்தது.
இது தொடர்பாக நாங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், எங்களுக்கான பணிக்காலம் டிசம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.
நீட்டிக்க வேண்டும்
இந்நிலையில் பணி ஒப்பந்த காலம் டிசம்பர் இறுதிவரை இருந்தும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கடந்த நவம்பர் மாதத்துடன் எங்களை பணியில் இருந்து நிறுத்திவிட்டதாக கூறியுள்ளார்.
எனவே எங்களது பணிக்காலத்தை டிசம்பர் மாதம் இறுதிவரை நீட்டிக்கவேண்டும், அரசு சார்பில் அறிவிக்கபட்ட கொரோனா ஊக்கத்தொகையை வழங்கிடவேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story