தமிழக மீனவர்கள் 55 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு


தமிழக மீனவர்கள் 55 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 19 Dec 2021 7:29 PM IST (Updated: 19 Dec 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை 8 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

ராமேசுவரம், 
ராமேசுவரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை 8 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.
கச்சத்தீவு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இந்திய-இலங்கை கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பார்கள். அப்போது அந்த வழியாக ரோந்து வரும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறை பிடிப்பது வழக்கம். மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை துறைமுகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தி விடுவார்கள்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மீனவர்கள் மீது தாக்குதல், விரட்டியடிப்பு, வலைகளை அறுத்து வீசுதல் போன்றவற்றில் அத்து மீறி ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதை கைவிட்டிருந்தனர்.
மீன் பிடிக்க சென்றனர்
இந்தநிலையில் ராமேசுவரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் காலை 537 படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் இரவு நடுக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் ரோந்து வந்தனர். 
அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் படகுகளை பார்த்ததும் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர். மேலும் இங்கு மீன்பிடிக்கக்கூடாது என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். 
இதைதொடர்ந்து மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர்.
43 மீனவர்கள் சிறைபிடிப்பு
அப்போது கச்சத்தீவு அருகே நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அவர்களது 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். 43 மீனவர்களையும், விசைப்படகுகளையும் இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். அங்கு மீனவர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை பார்த்த மற்ற மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இன்று காலை ராமேசுவரம் கரை திரும்பியதும் இதுபற்றி தெரிவித்தனர். இதனால் மீனவ கிராமங்களில் பதற்றமான நிலை உருவானது.
இலங்கை கடற்படையினர் 6 படகுகளுடன் பிடித்துச் சென்ற 43 மீனவர்களின் பெயர் விவரம் வருமாறு:- 
வினால்டன் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற ராஜ்(வயது 33), ரோமன்(38), நன்னாத்(32), சேசு(33), பெகாஸ்(19), கணிஸ்டன்(20), அஸ்வின்(20). லெவல் தாஸ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற சக்தி(37), சங்கர்(29), கோபி(32), பாலமுருகன்(30), ராஜகுரு(28), வேலு(40), பாஸ்கரன்(35). சார்லஸ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மலை கண்ணன்(40), நேதாஜி (45), குமரன் (35),கருமலையான் (45), கணேசன் (20), நம்பு (35), மகேஷ்(32).
செல்வம் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற குட்வின்(36), குணசேகரன்(45),பிரபுசன் (25), மயிலன்(30), சுரேஷ்(47), ஆன்சன்(19), கியூட்சன் (25). லியோ என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற பிரபு (40), காளிமுத்து (50), செல்வா(27), கிஷோர்(30), குமார்(54),ஹேர்லாஸ் (31), சிமியோன் (30) மேக்சிம்(40). மோகன் தயால் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற கிளர்தாஸ் (44), பாக்கியம்(40), இருதயராஜ் (33) பிச்சையா(42), ஜெரால்ட் (27), கதிரேசன் (29), நாகசாமி(45). 
மேலும் 12 பேர் கைது
மேலும் ராேமசுவரம் அருகே மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து நேற்று 40-க்கும் மேற்பட்ட படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 3 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 விசைப்படகு மற்றும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஏற்கனவே ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 6 விசைப்படகு 43 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மண்டபத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றத்தயும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர் கதை
இந்த சம்பவம் குறித்து ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறியதாவது:- 
ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் அடிக்கடி விரட்டி அடிப்பது, பிடித்து செல்வது தொடர்கதையாக உள்ளது. நேற்று மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றது கண்டனத்துக்குரியது. உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல். மத்திய அரசு முழுமையாக மீனவர்கள் மீது கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story