செஞ்சி அருகே ஏரியை உடைத்து தண்ணீரை வெளியேற்றிய ஆக்கிரமிப்பாளர்கள் விவசாயிகள் அதிர்ச்சி
செஞ்சி அருகே ஏரியை உடைத்து தண்ணீரை ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஜம்போதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் அந்த பகுதியில் உள்ள 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
சமீபத்தில் பெய்த பருவமழையால் ஏரி நிரம்பியது. ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறிக்கொண்டு இருந்தது. இந்நிலையில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் இடத்தில் கட்டப்பட்டு இருந்த சிமெண்டு சுவரை மர்ம மனிதர்கள் உடைத்து விட்டனர். இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் வீணாக வெளியேறியது. ஏரியின் நீர்மட்டமும் கணிசமாக குறைந்தது.
மணல் மூட்டைகளை அடுக்கினர்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாசன விவசாயிகள், ஒன்று கூடி அவசர, அவசரமாக உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் செஞ்சி தாசில்தார் பழனி, வருவாய் ஆய்வாளர் கண்ணன், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் தினேஷ்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அழகேசன் ஆகியோர் அங்கு சென்று உடைந்த ஏரிக்கரையை பார்வையிட்டனர். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில், தற்போது 70 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடத்தில் சிலர் விவசாயம் செய்து வந்தனர்.
மழையால் ஏரி நிரம்பியதால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களும் தண்ணீரில் மூழ்கின. இதனால் பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலைக்கு சென்றது.
தண்ணீரை வெளியேற்றினால் தான், மேற்கொண்டு ஆக்கிரமிப்பு பகுதியில் விவசாய பணி செய்ய முடியும் என்ற நோக்கில், ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியை உடைத்து விட்டுவிட்டனர்.
ஆண்டுதோறும் இவ்வாறு தான் நடக்கிறது, இதனால் எங்களுக்கு பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டு்ம் என்றனர்.
போலீசில் புகார்
இந்த சம்பவம் தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள், செஞ்சி போலீசில் புகார் செய்தனர். அதில் ஆக்கிரமிப்பாளர்களால் தான் ஏரி உடைக்கப்பட்டு விட்டது, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்கள். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story