பூண்டி ஏரியில் இருந்து திறப்பு: 10 டி.எம்.சி. உபரிநீர் வீணாக கடலில் சேர்ந்தது


பூண்டி ஏரியில் இருந்து திறப்பு: 10 டி.எம்.சி. உபரிநீர் வீணாக கடலில் சேர்ந்தது
x
தினத்தந்தி 19 Dec 2021 9:26 PM IST (Updated: 19 Dec 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட 10 டி.எம்.சி. உபரிநீர் வீணாக கடலில் சேர்ந்தது. கொசஸ்தலை ஆற்றின் மீது கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10 டி.எம்.சி. நீர்

சென்னை நகர மக்களுக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைப்பது வழக்கம்.

இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும். சென்னை நகர மக்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 10 டி.எம்.சி. குடிநீர் தேவைப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் 5 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகமாகியது.

இதனால் இந்த 5 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியதால் உபரிநீர் மதகுகள் மூலம் வெளியேற்றப்பட்டது. இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

வீணாக கடலில்...

கடந்த மாதம் 19-ந் தேதி ஏரி முழுவதுமாக நிரம்பியது. ஏரியின் பாதுகாப்பை கருதி அன்று முதல் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இப்படி திறந்துவிடப்பட்ட 10 டி.எம்.சி.

தண்ணீர் நேற்று மாலை வரை கடலில் போய் சேர்ந்துள்ளது. சென்னைக்கு வருடத்துக்கு சராசரி 10 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பலத்த மழை பெய்து ஏரி முழுவதுமாக நிரம்பியபோது உபரிநீர் வீணாக கடலில் கலப்பது தொடர் கதையாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Next Story