புவனகிரி அருகே ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
புவனகிரி அருகே ரத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புவனகிரி,
வாலிபர் பிணம்
புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் கிராம கருவேல மர காட்டுப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், இதுபற்றி புவனகிரி போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு, அக்கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், அதேஊரை சேர்ந்த ஜெகநாதன் மகன் சுந்தரமூர்த்தி(வயது 29) என்பதும், புவனகிரியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததும், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வௌியே சென்றவர் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலையா?
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரமூர்த்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்மமான முறையில் உயிரிழந்த சுந்தரமூர்த்திக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் புவனகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story