விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் வழுதரெட்டி, வி.ஜி.பி. நகர், பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்துதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட கலெக்டர் மோகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் இடங்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்களிடம் கள ஆய்வு மேற்கொண்டு ஆட்சேபனை கருத்துக்களுக்கு தீர்வு காண வேண்டும்.
விரைந்து முடிக்க வேண்டும்
மேலும் சுணக்கம் ஏற்படும் வகையில் பணியை மேற்கொண்டால் ஒப்பந்த நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும். பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து மேற்கொள்ளாத சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நிர்வாக ரீதியாகவும் விளக்கம் கோரப்படும்.
அதோடு சுற்றுப்புற சூழ்நிலைக்கு மாசு ஏற்படுத்தாமல் காத்திடும் பாதாள சாக்கடை திட்டத்தை தொடர்புடைய நிறுவனம் மற்றும் அலுவலர்கள் விரைந்து பணிகளை மேற்கொண்டு குறித்த காலத்திற்குள் பணிகளை முடித்து பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், விழுப்புரம் கோட்டாட்சியர் அரிதாஸ், குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் கடலூர் பழனிவேல், திண்டிவனம் விஜயன், ஊரக குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் அன்பழகன், நகராட்சி ஆணையர்கள் விழுப்புரம் சுரேந்திரஷா, திண்டிவனம் சவுந்தர்ராஜன், விழுப்புரம் நகராட்சி பொறியாளர் ஜோதிமணி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story