பழனி முருகன் கோவிலில் குவியும் அய்யப்ப பக்தர்கள்


பழனி முருகன் கோவிலில் குவியும் அய்யப்ப பக்தர்கள்
x
தினத்தந்தி 19 Dec 2021 9:53 PM IST (Updated: 19 Dec 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

அய்யப்ப பக்தர்கள் வருகையால் பழனி முருகன் கோவில் களை கட்டியுள்ளது.

பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என வெளிமாநிலங்களில் இருந்து தினமும் பக்தர்கள் வருகின்றனர்.
அதிலும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள், சபரிமலை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவர். அப்போது பழனி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
குறிப்பாக அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அழகுசாதன பொருட்கள், இனிப்பு கடைகள், பஞ்சாமிர்த கடைகள், தள்ளுவண்டி ஓட்டல்கள் புதிதாக திறக்கப்பட்டு வியாபாரம் கோடிக்கணக்கில் நடைபெறும். இதை நம்பி சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வந்தனர்.
 அய்யப்ப பக்தர்கள் வருகை
இந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள், அய்யப்ப பக்தர்கள் வருகை இல்லாமல் இருந்தது. இதனால் சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, பழனி முருகன் கோவிலுக்கு கார்த்திகை மாதம் முதலே அய்யப்ப பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் பாதயாத்திரையாகவும் ஏராளமான முருக பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர். இதனால் பழனி கிரிவீதி, அடிவாரத்தில் காலை, மாலை வேளைகளில் திருவிழாவை போல் கூட்டம் களைகட்டுகிறது. பின்னர் பக்தர்கள் அடிவார பகுதியில் உள்ள கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதால் வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story