நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு தொடக்கம்


நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு தொடக்கம்
x
தினத்தந்தி 19 Dec 2021 10:14 PM IST (Updated: 19 Dec 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு தொடக்கம்

நாமக்கல், டிச.20-
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 200 பேர் முன்பதிவு செய்தனர்.
ஆஞ்சநேயர் கோவில்
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினந்தோறும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு, 1,008 வடைமாலை சாத்தப்படும். பின்னர் நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், பால், தயிர் மற்றும் மஞ்சள், சந்தனம் போன்ற நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான செலவை பக்தர்கள் ஏற்று நடத்தி வருகின்றனர்.
கடந்த காலங்களில் அபிஷேக செலவை, 3 பேர் ஏற்கும் வகையில் நடைமுறை இருந்து வந்தது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒருநாள் அபிஷேகத்தில் 5 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி ஒரு நபருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
200 பேர் முன்பதிவு
இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான வடமாலை அபிஷேகத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. இதுகுறித்து கோவில் பணியாளர்கள் கூறியதாவது :-
மொத்தம் உள்ள 365 நாட்களில் 12 நாட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் அபிஷேகம் செய்யப்படும். மீதமுள்ள 353 நாட்களுக்கு 1,765 பேர் அபிஷேகத்தில் பங்கேற்க முடியும். ஆனால் கடந்த கொரோனா காலத்தில் முன்பதிவு செய்து காத்திருந்த 80 பேருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தேதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுபோக முதல்நாளான நேற்று முதல் 40 நாட்களுக்கு 200 பேர் முன்பதிவு செய்தனர். இதில் பெரும்பாலான நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் ஆகும். மீதமுள்ள நாட்களுக்கு முன்பதிவு தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story