ஆண்டிப்பட்டி நர்சு கொலை வழக்கில் திடீர் திருப்பம்
ஆண்டிப்பட்டி நர்சு கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை, அரசு மருத்துவமனை ஊழியர் தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆண்டிப்பட்டி:
அரசு நர்சு கொலை
ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவர், ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 24-ந்தேதி வீட்டில் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். செல்வியிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியவர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர்.
அதன்படி கடந்த 10-ந்தேதியன்று, தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த கம்பம் அரசு மருத்துவமனை ஊழியர் ராமச்சந்திரபிரபு (34) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
விஷம் குடித்து தற்கொலை
விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர், 11-ந்தேதி உத்தமபாளையம் அருகே உள்ள ஊத்துக்காடு வனப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ராமச்சந்திரபிரபு மீது போலீசாருக்கு மேலும் சந்தேகம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து ராமச்சந்திரபிரபு குறித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட நர்சு செல்வியும், மருத்துவ பணியாளர் ராமச்சந்திரபிரபுவும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னர் இருவரும் வெவ்வேறு மருத்துவமனைக்கு இடமாறுதல் ஆகினர். ஆனால் அவர்களுக்கிடையேயான தொடர்பு நீடித்துள்ளது. செல்வியிடம் கடனாக கொடுத்த பணத்தை தரும்படி ராமச்சந்திரபிரபு கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் பணம் தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் செல்வியின் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். இந்த காட்சி, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அப்போது செல்விக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நகை அடகு வைப்பு
இதில் செல்வியை அவர் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். கொலை நடந்த வீட்டில் பதிவான கைரேகையும், ராமச்சந்திரபிரபுவின் கைரேகையும் ஒத்து போனது.
மேலும் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை ராமச்சந்திரபிரபு எடுத்து சென்றுள்ளார். அதனை பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அவர் அடகு வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இருந்து நர்சு செல்வியை கொலை செய்தது, ராமச்சந்திரபிரபு தான் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story