மாவட்ட பெண்கள் கபடி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு 168 பேர் ஆர்வத்துடன் பங்கேற்பு
கடலூர் மாவட்ட பெண்கள் கபடி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு நேற்று நடந்தது. இதில் 168 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கடலூர்,
பெண்கள் கபடி அணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி முதல் 2.1.2022 வரை 47-வது தமிழ்நாடு சீனியர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட பெண்கள் கபடி அணித்தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.
இதில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம், கடலூர் புனித வளனார் கல்லூரி, கே.என்.சி. கல்லூரி, பெரியார் அரசு கல்லூரி உள்பட கல்லூரி, பள்ளிகளை சேர்ந்த கபடி வீராங் கனைகள் 168 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
12 பேர் தேர்வு
அதையடுத்து அவர்களை தனித்தனி அணியாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறந்த வீராங்கனைகள், அதாவது சூப்பர் ரைடர், பாடி செல்வோரை மடக்கி பிடித்தல் என போட்டிகளில் சிறந்து விளங்கிய 12 பேரை மாவட்ட கபடி கழக தலைவர் வேலவன் முன்னிலையில், பொருளாளர் மணிபாலன், கபடி பயிற்சியாளர்கள் புஷ்பராஜ், நாகராஜ், தேசிய கபடி வீரர்கள் ஞானமுருகன், நவநீதன், தனசேகர், என்.எல்.சி. பயிற்சியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட 12 பேரும் பயிற்சி முகாம் முடிந்து, மாநில போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட செயலாளர் நடராஜன் தெரிவித்தார். இந்த தேர்வில் தபால் துறை கபடி வீரர் மணிகண்டன், பல்கலைக்கழக கபடி வீரர் கிஷோக் மற்றும் மூத்த கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story