இந்து முன்னணி-பா.ஜ.க.வினர் மறியல்
தவுட்டுப்பாளையத்தில் போலீசாரை கண்டித்து இந்து முன்னணி-பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நொய்யல்
மதமாற்றம்
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் காலை காரில் வந்த கரூரை சேர்ந்த மங்கலராஜ் உள்பட 5 பேர் மாணவர்களிடம் மதமாற்றம் முயற்சியில் ஈடுபட்டனர். அதை பொதுமக்கள் கண்டித்தபோது அவர்கள் காரில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது கார் பொதுமக்கள் மீது மோதுவது போல் சென்றது.
இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதில் காரின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் மங்கலராஜ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை ஜாமினில் விடுவித்தனர்.
சாலை மறியல்
இந்நிலையில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக இந்து முன்னணியின் கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் காகிதபுரம் முத்துநகரை சேர்ந்த கந்தசாமி (வயது 45) என்பவரை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையறிந்த இந்துமுன்னணி மற்றும் பா.ஜ.க.வினர் உள்பட இந்து அமைப்பினர் கந்தசாமியை விடுதலை செய்யகோரி நேற்று காலை தவுட்டுப்பாளையம் காவிரி பாலம் அருகே கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவலறிந்த கரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், அரவக்குறிச்சி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது கந்தசாமியை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்து, அதற்கான புகார் மனுவை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனிடம் வழங்கினர். இதையடுத்து உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story