சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தேரோட்டம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம்;
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி திருவிழா
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரத நாட்டியம், நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
9-ம் திருவிழாவான நேற்று மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் பிட்சாடனராக உலா வந்தார். காலை 6.45 மணியளவில் சாமியும் அம்பாளும் தட்டு வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் பவனி வந்து மீண்டும் கோவிலுக்குள் சென்றனர்.
தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. 8.10 மணிக்கு அம்பாள் உடன் கூடிய சாமியையும், அறம்வளர்த்த நாயகி அம்மனையும், விநாயகரையும் தனித்தனியாக வாகனங்களில் எழுந்தருளச் செய்து மலர்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க எடுத்து வந்தனர்.
தேர் வடம் பிடித்து இழுத்தல்
அம்பாளுடன் கூடிய சாமியை, பெரிய தேரிலும் (சாமி தேர்) அறம் வளர்த்த நாயகியை அம்மன் தேரிலும், விநாயகரை பிள்ளையார் தேரிலும் எழுந்தருள செய்தனர். பின்னர் தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தேரின் வலது பக்க சக்கரத்தில் சந்தனம் தெளித்தும், தேங்காய் உடைத்தும், மாலை அணிவித்தும் தீபாராதனை காட்டப்பட்டது. 8.35 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முதலில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. தொடர்ந்து சாமிதேர், அம்மன் தேர் இழுக்கப்பட்டன.
அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக சுசீந்திரத்தில் குவிந்தனர். இதனால் கோவிலை சுற்றி உள்ள நான்கு ரத வீதிகளிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளித்தது. பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர்கள் நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்த பிறகு நண்பகல் 12.10 மணிக்கு வெடி முழக்கத்துடன் பெண்கள் குலவையிட நிலைக்கு வந்து சேர்ந்தன. தொடர்ந்து சாமி, அம்பாள், அறம்வளர்த்த நாயகி அம்மன், விநாயகர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கோவிலுக்குள் எடுத்து செல்லப்பட்டது.
தேரோடும் வீதியில் பக்தர்களுக்கு பானகாரம், மோர், பழம், தண்ணீர் மற்றும் அன்னதானம் போன்றவை பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டன. தேர் நிலைக்கு நின்றதும் ஏராளமான பக்தர்கள் அருகில் உள்ள சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு சென்றனர்.
சப்தா வர்ணம்
பின்னர் அவர்கள் இரவில் மீண்டும் சுசீந்திரம் கோவிலுக்கு வந்தனர். அதன்பின்னர் நள்ளிரவில் சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடந்தது. இ்தை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் தாணுமாலய சாமி, அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன், கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரம் பெருமாளும் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். அதன் பின்னர் மருங்கூர் முருகப்பெருமானும், கோட்டார் ஏழகரம் வலம்புரி விநாயகரும், வேளிமலை குமாரசாமியும் எதிரெதிரே காட்சியளிக்க அனைத்து தெய்வங்களுக்கும் ஒன்றுபோல் தீபாராதனை நடந்தது. அப்போது இரு முருகப்பெருமானும், வலம்புரி விநாயகரும் தாணுமாலய சாமியை வலம் வந்து எதிரே நிற்க தாணுமாலயசாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் கோவில் சன்னிதானத்தில் முன்னும் பின்னும் அசைந்து, அசைந்து செல்வதும், பின்னர் திரும்புவதுமாக பலமுறை நடந்தது. இந்தக் காட்சியை கண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெண்கள் குலவையிட்டு மங்கல ஒலி எழுப்பிட பின்னர் மேளதாளம் முழங்க 3 வாகனங்களில் இருந்த சாமிகளும் கோவிலை சென்றடைந்தனர்.
சப்தாவர்ணம் காட்சியை காண வந்த பக்தர்கள் பலரும் இரவு கோவிலிலேயே தங்கினர். இதனையடுத்து அதிகாலை நடந்த ஆருத்ரா தரிசனத்தை கண்டு களித்தனர். பின்னர் பக்தர்கள் திருவாதிரை களியினை உண்டு தாணுமாலய சாமியை தரிசனம் செய்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
தேரோட்டம் மற்றும் சப்தாவர்ணம் நிகழ்ச்சியையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் சுசீந்திரத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர். சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டம் காண வந்த பக்தர்களுக்கு வசதியாக கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சுசீந்திரம் தேரோட்டத்தில் புதுமண தம்பதிகள் கலந்துகொண்டு தாணுமாலயசாமியை தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக நேற்று நடந்த தேர் திருவிழாவில் ஏராளமான புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கலந்து ெகாண்டவர்கள்
தேரோட்ட திருவிழாவில் விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி, குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், வருவாய் கோட்டாட்சியாளர் சேதுராமன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், தாசில்தார்கள் கோலப்பன், சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story