ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட குளம் நிரம்பியது
தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவிலுக்கு சொந்தமான குளம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டதையடுத்து அந்த குளம் நீர்நிரம்பி காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவிலுக்கு சொந்தமான குளம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டதையடுத்து அந்த குளம் நீர்நிரம்பி காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எல்லையம்மன் கோவில் குளம்
தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளம் 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. மேலும் குளத்தை ஆக்கிரமித்து சுற்றிலும் வேலி அமைத்து வீடுகளும் கட்டப்பட்டு இருந்தன.
இதையடுத்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். மேலும் ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இதையடுத்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம், தஞ்சை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 14-ந்தேதி பொக்லின் எந்திரம் உதவியுடன் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த குளம் அந்த பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கி வந்தது. இந்த குளம் ஆதாம் கால்வாய் பாசன வாய்க்காலின் முதல் குளமாகவும் திகழ்ந்தது.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டவுடன் குளத்தில் தூர்வாரும் பணியை அந்த பகுதி பொதுமக்கள் மேற்கொண்டனர். அதன்படி 10 ஆயிரத்து 158 சதுரஅடி பரப்பளவுள்ள அந்த குளம் தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டது. இதையடுத்து ஆதாம்கால்வாயில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து தற்போது குளம் நீர் நிரம்பி காட்சி அளிக்கிறது.
நீர் நிரம்பியதால் மகிழ்ச்சி
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், “75 ஆண்டுகளுக்குப்பிறகு குளம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு தற்போது நீர் நிரப்பப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தந்த தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.”என்றனர்.
Related Tags :
Next Story