காதல் திருமணத்துக்கு உதவிய வாலிபர் படுகொலை - நண்பர்கள் 4 பேர் கைது
மண்டியாவில் நண்பனின் காதல் திருமணத்துக்கு உதவிய வாலிபரை நண்பர்களே படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அந்த வாலிபரின் நண்பர்கள் 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரு:
காதல் திருமணத்துக்கு உதவி
மண்டியா (மாவட்டம்) தாலுகா கல்லஹள்ளி அருகே உள்ள யலியூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரக்ஷித்(வயது 21). இவருக்கு அப்பகுதியில் ஏராளமான நண்பர்கள் உள்ளனர். இவரது நண்பர்களில் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார்.
இதையடுத்து தனது நண்பருக்கும், அவரது காதலிக்கும் ரக்ஷித் திருமணம் செய்து வைத்தார். நண்பனின் காதல் திருமணத்திற்கு உதவியதால், ரக்ஷித்தை அவரது மற்ற நண்பர்களுக்கு பிடிக்கவில்லை. இதுபற்றி அவர்கள் ரக்ஷித்திடம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் ரக்ஷித் எப்போதும்போல சுற்றித்திரிந்தார்.
சரமாரி தாக்குதல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லஹள்ளி படாவனே அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்கள் ரக்ஷித்தையும் அழைத்தனர். அதன்பேரில் அவரும் அங்கு சென்று நண்பர்களுடன் இருந்தார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் நண்பனின் காதல் திருமணத்துக்கு உதவியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ரக்ஷித்தின் நண்பர்கள், அங்கு கிடந்த கற்கள், உருட்டு கட்டைகளால் ரக்ஷித்தை சரமாரியாக தாக்கி அடித்து, உதைத்தனர். இதில் ரக்ஷித் பலத்த ரத்தக்காயம் அடைந்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடி கிராமத்திற்குள் புகுந்து தஞ்சம் அடைந்தார்.
உயிரிழந்தார்
அவர் ரத்தக்காயங்களுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக இதுபற்றி கல்லஹள்ளி படாவனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரக்ஷித்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ரக்ஷித் இறந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
4 பேர் கைது
பின்னர் போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ரக்ஷித்தின் நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை ந டத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story