தஞ்சைக்கு 30-ந் தேதி மு.க.ஸ்டாலின் வருகை
நலத்திட்ட உதவிகள் வழங்க தஞ்சைக்கு, 30-ந் தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார் என்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தஞ்சாவூர்:
நலத்திட்ட உதவிகள் வழங்க தஞ்சைக்கு, 30-ந் தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார் என்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
தஞ்சை மன்னர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரி மைதானத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பந்தக்கால் நட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த வாரம், "மக்களைத் தேடி முதல்வர்" சிறப்பு திட்டத்தின் கீழ் 55 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது எவ்வளவு தீர்வு காண முடியுமோ அந்த அளவுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
30-ந்தேதி தஞ்சை வருகை
தஞ்சைக்கு வருகிற 30-ந் தேதி(வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.
அவர் வரும்போது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அப்போது அவர் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
தஞ்சை மாவட்டத்தில், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகளும் வழங்க ஒருங்கிணைப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் தஞ்சை மாவட்டத்துக்கு வந்து சென்ற பிறகு இன்னும் அதிக அளவில் இந்த மாவட்டம் வளர்ச்சி பெறும்.
ரூ.250 கோடியாக உயர்வு
கடந்த 4 மாதங்களாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பயன்படுத்த முடியாத பள்ளிக் கட்டிங்கள் இடிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலி சம்பவத்தை தொடர்ந்து இது விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சேதமான கட்டிடங்கள் இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளி கட்டிடங்கள் பராமரிக்க அதற்கான நிதி கடந்த 2 ஆண்டுகளாக ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் அது ரூ.250 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் தேவைப்படும் பட்சத்தில் நபார்டு வங்கி மூலம் நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை
சென்னையில் பாலியல் தொல்லையால் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தயவு செய்து இது போன்ற விபரீத செயலில் மாணவிகள் ஈடுபட கூடாது. உங்கள் பிரச்சினையை மனம் விட்டு பேசுங்கள். நாங்கள் தீர்த்து வைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் இருந்தனர்.
Related Tags :
Next Story