பெலகாவிக்கு பேரணியாக சென்று சுவர்ண சவுதா இன்று முற்றுகை - கன்னட அமைப்புகள் அறிவிப்பு


பெலகாவிக்கு பேரணியாக சென்று சுவர்ண சவுதா இன்று முற்றுகை - கன்னட அமைப்புகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Dec 2021 2:19 AM IST (Updated: 20 Dec 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணா சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் பெலகாவிக்கு பேரணியாக சென்று சுவர்ணசவுதாவை இன்று (திங்கட்கிழமை) முற்றுகையிட போவதாக கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

பெலகாவி:

2-வது நாளாக போராட்டம்

  மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் கன்னட கொடி எரிக்கப்பட்டதை கண்டித்து, பெங்களூரு சதாசிவநகரில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை மீது கருப்பு மை பூசி அவமதிக்கப்பட்டது. இதனை கண்டித்து கடந்த 17-ந் தேதி பெலகாவியில் மராட்டியத்தை சேர்ந்த எம்.இ.எஸ். அமைப்பினர், சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். அன்றைய தினம் இரவு பெலகாவியில் எம்.இ.எஸ். அமைப்பினர் வன்முறையை அரங்கேற்றினர். அரசு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் உள்பட 26 வாகனங்களின் கண்ணாடிகளை கல்வீசி தாக்கினர். மேலும் ஒரு போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்தனர். பெலகாவி அனகோல் கனகதாசா நகரில் உள்ள சங்கொள்ளி ராயண்ணாவின் சிலையும் சேதப்படுத்தப்பட்டது.

  இதுதொடர்பாக பெலகாவியில் 3 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு ஆகி உள்ளது. மேலும் மராட்டிய அமைப்பை சேர்ந்த 27 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். மேலும் பெங்களூருவில் சிவாஜி சிலையை அவமதித்த 7 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் எம்.இ.எஸ். அமைப்பினரை கண்டித்து நேற்று முன்தினமே கர்நாடகத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். நேற்று 2-வது நாளாக கன்னட அமைப்பினரின் போராட்டம் தொடர்ந்தது. பெங்களூரு கே.எஸ்.ஆர். சர்க்கிள், மைசூரு வங்கி சர்க்கிளில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதுபோல நேற்று பெலகாவியிலும் கர்நாடக ரக்‌ஷன வேதிகே அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

கன்னட அமைப்பினர் கைது

  பெலகாவி பீரனவாடியில் உள்ள சங்கொள்ளி ராயண்ணா சிலை முன்பு போராட்டம் நடத்திய கர்நாடக ரக்‌ஷன வேதிகே அமைப்பினர் அங்கிருந்து அனகோல் கனகதாசா நகரில் உள்ள சங்கொள்ளி ராயண்ணா சிலைக்கு பேரணியாக வந்தனர். அப்போது கர்நாடகத்தில் எம்.இ.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

  அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பெலகாவியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் பேரணி செல்ல அனுமதி இல்லை என்று கூறினர். ஆனால் இதனை ஏற்க மறுத்த கன்னட அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். மேலும் தடையை மீறி பேரணி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு உண்டானது. பின்னர் கன்னட அமைப்பினரை போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி சென்று அம்பேத்கர் பவனில் தங்க வைத்தனர். அதையடுத்து அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பாலாபிஷேகம் செய்து வழிபாடு

  இந்த நிலையில் சேதப்படுத்தப்பட்ட இடத்தில் புதிதாக சங்கொள்ளி ராயண்ணா சிலையை நிறுவ கன்னட அமைப்பினர் முடிவு செய்தனர். இதையடுத்து பெலகாவியை சேர்ந்த சிற்பிகள் குழு சங்கொள்ளி ராயண்ணா சிலையை வடிவமைத்தனர்.

  நேற்று காலை சேதப்படுத்தப்பட்ட அதே இடத்தில் புதிதாக சங்கொள்ளி ராயண்ணாவின் சிலையை கன்னட அமைப்பினர் நிறுவினர். அந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்ய பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் புதிய சங்கொள்ளி ராயண்ணா சிலைக்கு பாலாபிஷேகம் செய்து கன்னட அமைப்பினர் வழிபட்டனர்.

  இந்த நிலையில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இச்சம்பவத்தை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் உருவப்படம், உருவப்பொம்மை தீ வைத்து எரித்தனர். மேலும் எம்.இ.எஸ். அமைப்பை தடை செய்ய கோரியும், கர்நாடக அரசு வாகனங்களை சேதப்படுத்தியதை கண்டித்தும் பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு பேரணியாக சென்று இன்று (திங்கட்கிழமை) சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

படை எடுக்கும் கன்னட அமைப்பினர்

  இதனால் பெங்களூரு, மண்டியா, சிவமொக்கா, கோலார், ராமநகர், குடகு, சிக்கமகளூரு உள்பட தென்கர்நாடக பகுதிகளில் இருந்தும், விஜயாப்புரா, பாகல்கோட்டை, கதக், தார்வார், யாதகிரி, பீதர் உள்ளிட்ட வடகர்நாடக பகுதிகளில் இருந்தும் பெலகாவிக்கு கன்னட அமைப்பினர் வாகனங்களில் படையெடுத்து செல்கின்றனர். இது பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

144 தடை உத்தரவு

  2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சுவர்ண சவுதாவில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது சுவர்ண சவுதா முன்பு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் தியாகராஜன் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

  மேலும் பெலகாவி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. ரெயில், பஸ் நிலையங்கள், எல்லைப்பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். 144 தடை உத்தரவு குறித்து கமிஷனர் தியாகராஜன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  பெலகாவியில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் 4 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டங்கள், பேரணி, ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பயம் இல்லை

  இந்த 144 உத்தரவு குறித்து கர்நாடக ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயணகவுடா கூறும்போது, ‘‘எந்த தடை விதித்தாலும் எங்களுக்கு பயம் இல்லை. ஏற்கனவே கூறியபடி சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். பீரனவாடியில் உள்ள சங்கொள்ளி ராயண்ணா சிலையில் இருந்து அனகோலில் உள்ள சங்கொள்ளி ராயண்ணா சிலை வரை ஊர்வலமாக செல்ல உள்ளோம். அதன்பின்னர் சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.
  
  உப்பள்ளியில் உள்ள தன்னுடைய வீட்டில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தேசபக்தர்களை கவுரவப்படுத்துவது...

  பெலகாவியில் நடந்த வன்முறை மற்றும் சங்கொள்ளி ராயண்ணா சிலையை அவமதிப்பு செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசபக்தர்களை கவுரவப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். சத்ரபதி சிவாஜி, கித்தூர் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா ஆகியோர் தேசபக்தர்கள் ஆவார்கள்.

  நாட்டுக்கு நமது உயிரை தியாகம் செய்தவர்கள். அவர்களை கவுரவப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கு உள்ளது. சங்கொள்ளி ராயண்ணா சிலையை உடைப்பது, சத்ரபதி சிவாஜியின் சிலையை அவமதிப்பதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் தேவையில்லாத வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படும்.

அரசு வேடிக்கை பார்க்காது

  மக்களின் அமைதியை கெடுப்பது, சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை கண்டு, அரசு சகித்து கொண்டு வேடிக்கை பார்க்காது. எந்த ஒரு நபரும் வன்முறை மற்றும் தேசபக்தர்களை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. கடந்த 2 நாட்களாக பெலகாவி உள்பட மாநிலத்தில் சில பகுதிகளில் நடைபெறும் சம்பவங்கள், வேறு மாதிரியான பாதை நோக்கி செல்வது கவனத்திற்கு வந்துள்ளது. எக்காரணத்தை கொண்டும் பொய் செய்திகளை யாரும் பரப்ப கூடாது.

  வன்முறையை தூண்டி விடும் செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. வன்முறையில் ஈடுபடுவதை எனது தலைமையிலான அரசு சகித்து கொண்டு இருக்காது. இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்து கொண்டு இருக்கிறது. சங்கொள்ளி ராயண்ணாவின் சிலையை அவமதித்த 27 பேரையும், சத்ரபதி சிவாஜி சிலையை அவமதித்த 7 பேரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

இரும்பு கரம் கொண்டு...

  பெலகாவியில் நடந்த வன்முறைக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்?, அவர்களது உள்நோக்கம் என்ன? உள்ளிட்ட அனைத்து வித கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெலகாவியில் தற்போது அமைதி திரும்பி இருக்கிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். யாரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை.

  பெலகாவியில் நடந்த வன்முறை மற்றும் அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ள சிலர் முயற்சிப்பார்கள். அதற்கு இடம் அளிக்க கூடாது. போராட்டத்தின் பெயரில் சட்டத்தை கையில் எடுப்பவர்கள், சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். இந்த விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story