டிரைவர், கண்டக்டர் மீதான பணியிடை நீக்கம் விலக்கி கொள்ளப்படுகிறது அதிகாரி தகவல்
மீன் விற்கும் பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட சம்பவத்தில் டிரைவர், கண்டக்டர் மீதான பணியிடை நீக்கம் விலக்கி கொள்ளப்படுகிறது என அதிகாரி தெரிவித்தார்.
நாகர்கோவில்:
மீன் விற்கும் பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட சம்பவத்தில் டிரைவர், கண்டக்டர் மீதான பணியிடை நீக்கம் விலக்கி கொள்ளப்படுகிறது என அதிகாரி தெரிவித்தார்.
பணியிடை நீக்கம்
குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்தவர் செல்வமேரி (வயது 65). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் குளச்சல் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக மீன் கூடையுடன் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது துர்நாற்றம் வீசுவதாகக்கூறி, செல்வமேரியை பஸ்சில் இருந்து கண்டக்டர் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குமரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து அந்த பஸ்சின் கண்டக்டர் மணிகண்டன், டிரைவர் மைக்கேல், நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அரவிந்த் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பயிற்சி
இந்த 3 பேரின் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு விலக்கப்பட்டு, இதுபோன்ற செயலில் அவர்கள் ஈடுபடாமல் இருக்க அவர்களுக்கு ராணித்தோட்டத்தில் உள்ள பயிற்சி மையத்தில் கவுன்சிலிங் மற்றும் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அரவிந்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிரைவர், கண்டக்டர், நேரக்காப்பாளர் ஆகிய 3 பேரின் பணியிடை நீக்க உத்தரவு இன்று (திங்கட்கிழமை) முதல் விலக்கி கொள்ளப்பட இருக்கிறது. அதைத்தொடர்ந்து அவர்கள் இதுபோன்று இனிமேலும் தவறு செய்யாமல் இருப்பதற்காக அவர்களுக்கு சில நாட்கள் ராணித்தோட்டத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சியும், கவுன்சிலிங்கும் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்குப்பிறகு அவர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story