‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயன்படாத தண்ணீர் தொட்டி
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா காந்திநகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி பராமரிப்பு இல்லாததால் அதன் அருகில் முட்செடிகள் வளர்ந்து புதர் போன்று காட்சி அளிப்பதுடன், பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுத்து தண்ணீர் தொட்டியை சூழ்ந்து கிடக்கும் புதாரை சுத்தம் செய்வதுடன், தண்ணீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ஊர்மக்கள், கருங்கல்லூர், சேலம்.
===
பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை
நாமக்கல்- திருச்செங்கோடு 4 வழிச்சாலையில் முக்கியமான பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை. உஞ்சனை ராயர்பாளையம், மாணிக்கம் பாளையம், வேலகவுண்டம்பட்டி, நல்லிபாளையம் உள்ளிட்ட ஊர்களில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். வெயில், மழை காலங்களில் அவர்களது நிலை சொல்லி மாளாது. எனவே இந்த பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க ேவண்டும்.
-ஏ.சி.செந்தில்குமார், மாணிக்கம்பாளையம், நாமக்கல்.
===
கால்வாய் அமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஊராட்சி முல்லை நகர், அக்ரஹாரம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் மழைக்காலங்களில் சாக்கடை நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி கிடக்கிறது. எனவே அந்த பகுதியில் சாக்கடை நீர் செல்ல கால்வாய் வசதி செய்து தர வேண்டும்.
-திம்மராஜ், கிருஷ்ணகிரி.
====
சாக்கடை கால்வாயில் குடிநீர் குழாய்
சேலம் மாவட்டம் காட்டுக்கோட்டை அண்ணாசாலை அருகில் தேவேந்திரர் தெருவில் சாக்கடை கால்வாய் வழியாக குடிநீர் குழாய் செல்கிறது. இதனால் எளிதில் நோய் பரவும் அபாயம் உள்ளது. இது பற்றி பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்களின் நலன் கருதி விரைவில் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயில் செல்லும் குடிநீர் குழாயை வேறு வழியாக அமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், காட்டுக்கோட்டை, சேலம்.
===
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் குப்பைகள் தேங்கி வருடக் கணக்காக அள்ளாமல் இருக்கிறது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் மூக்கை பிடித்துக்கொண்டு அந்த பஸ் நிறுத்தத்தில் நிற்க வேண்டிய உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சத்திரம், சேலம்.
==
ஆபத்தான மரம்
சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு காலனி 12-வது வார்டில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் முதல் வீதியில் சாக்கடை நீர் கால்வாயில் அரசமரத்தின் வேர் ஒன்று அடைத்துள்ளது. மேலும் இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. அருகில் மின்கம்பம் ஒன்று நிற்கிறது. எனவே இந்த பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே ஆபத்தான இந்த மரத்தை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--ஊர் பொதுமக்கள், கோர்ட்டு ரோடு காலனி, சேலம்.
===
குரங்குகள் தொல்லை
சேலம் அயோத்தியாப்பட்டணம், சீலநாயக்கன்பட்டி, டி.ஆர்.அலுவலகம், டி.ஐ.ஜி. அலுவலகம் ஆகிய பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குரங்குகள் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரை சேதப்படுத்துகின்றன. இதுதவிர மின் வயர்களில் தொங்குவதால் அவை சேதமாகின்றன. இதுதவிர வீடுகளில் புகுந்து உணவு பொருட்களை எடுத்து செல்கின்றன. எனவே இந்த குரங்களை பிடித்து வனப்பகுதியில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், சாஸ்திரி நகர், சேலம்.
===
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா செட்டிமாங்குறிச்சி கிராமம் அரசு மருத்துவமனை பின்புறம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் மதுப்பிரியர்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், பெண்கள் அந்த பகுதியை கடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று மதுபிரியர்களின் அட்டகாசத்தை தடுக்க வேண்டும்.
-ஹரிகிருஷ்ணன், செட்டிமாங்குறிச்சி, சேலம்.
===
வீணாகும் குடிநீர்
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா கல்வடங்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக காவிரி நீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியின் குழாய் உடைந்து இருப்பதால் குடிநீர் வீணாகி சாக்கடையில் கலக்கிறது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் பலன் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரி செய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்.
-ஊர்பொதுமக்கள், கல்வடங்கம், சேலம்.
===
Related Tags :
Next Story