வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Dec 2021 2:04 PM IST (Updated: 20 Dec 2021 2:04 PM IST)
t-max-icont-min-icon

வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்:

வேலை கிடைக்காததால்...
பெரம்பலூர் அருகே எளம்பலூர் அனப்புடையான் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு சூர்யபிரகாஷ் (வயது 31), குருபிரசாத் என 2 மகன்கள் உண்டு. தற்போது தேவராஜ் பெரம்பலூர் மதரசா ரோடு மேட்டுத்தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சூர்யபிரகாஷ் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடி வந்தார். குருபிரசாத் சிவில் என்ஜினீயரிங் படித்துவிட்டு விழுப்புரத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யபிரகாஷ் வேலை கிடைத்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வதாகவும், அதுவரை தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறியதாக தெரிகிறது. ஆனாலும் பல இடங்களில் தேடியும் சரியான வேலை கிடைக்காததால் சூர்யபிரகாஷ் விரக்தியில் இருந்துள்ளார்.
தூக்கில் தொங்கினார்
இந்நிலையில் நேற்று காலை 7 மணி வரை சூர்யபிரகாசின் படுக்கை அறையின் கதவு திறக்கப்படவில்லை. தேவராஜ் கதவை தட்டியும் திறக்கப்படாததால் மகன் தூங்கி கொண்டிருப்பான் என்று நினைத்து சென்றுள்ளார். பின்னர் காலை 9 மணி ஆகியும் சூர்யபிரகாஷ் வெளியே வராததால் சந்தேகமடைந்த தேவராஜ் அறையின் கதவை வேகமாக தள்ளியதால், கதவு திறந்தது.
இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது சூர்யபிரகாஷ் மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூர்யபிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தேவராஜ் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story