படிக்கட்டில் தொங்கியதை கண்டித்ததால் பஸ் கண்டக்டரை தாக்கிய 2 மாணவர்கள் கைது


படிக்கட்டில் தொங்கியதை கண்டித்ததால் பஸ் கண்டக்டரை தாக்கிய 2 மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 20 Dec 2021 3:10 PM IST (Updated: 20 Dec 2021 3:10 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூருக்கு சென்ற மாநகர பஸ்சில் படிக்கட்டில் தொங்கியதை கண்டித்ததால் பஸ் கண்டக்டரை தாக்கிய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை பெரம்பூருக்கு சென்ற மாநகர பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களை கண்டக்டர் கார்த்திக் கண்டித்தார். ஆத்திரம் அடைந்த மாணவர்கள், கண்டக்டர் மீது கற்களை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதை கண்டித்து சக பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஓட்டேரி பகுதியில் ஆங்காங்கே சாலையின் இருபுறமும் பஸ்களை நிறுத்திவிட்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர்களுடன் பஸ்சில் இருந்த பயணிகள், பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சமாதானம் செய்ததால் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பஸ்களை இயக்கினர்.

இந்தநிலையில் கண்டக்டர் கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார், புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 2 பேரை கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர். அவர்களது பெற்றோரையும் அழைத்து எச்சரித்தனர்.

அதேபோல் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் கண்டக்டர் கார்த்திக், டிரைவர் சுப்பிரமணி உள்பட 50 பேர் மீது ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அனுமதி இன்றி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story