15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2021 5:36 PM IST (Updated: 20 Dec 2021 5:36 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

15 அம்ச கோரிக்கைகள்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

 ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சம்பத்ராவ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சாமியார் வரவேற்றார். 

முன்னதாக அவர்கள் திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து கோஷம் எழுப்பிய படி ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். 

ஊர்வலத்தை மாவட்ட செயலாளரும் மாநில பொருளாளருமான சேகர் தொடங்கி வைத்தார். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் வேல்முருகன், இணைச் செயலாளர் அண்ணாமலை, முன்னாள் மாவட்ட தலைவர்கள் மனோகரன், ஆனந்தன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். 

இதில் பணியாளர்களின் நலன் கருதி கருணை ஓய்வூதியம், ஓய்வூதியம் வழங்கிடும் வகையில் தக்க உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். பொங்கல் விழாவுக்கு வழங்கப்படும் பொருட்களை தனித்தனியாக பேக்கிங் செய்து வழங்க வேண்டும். அனைத்துச் சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்களும் காலதாமதமின்றி நிரப்ப வேண்டும்.

இறுதி தணிக்கை

கூடுதல் பொறுப்பை கவனித்து வரும் செயலாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கு 30 சதவீத ஊதியத்தை அதிகரித்து வழங்க வேண்டும்.

 பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுப்பணி நிலைத் திறன் திட்டதை ரத்து செய்து தவறு செய்யும் பணியாளர்கள் மீது கூட்டுறவு சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பாலான சங்கங்களின் 2020-2021 ஆண்டுக்கான இறுதி தணிக்கை முடிவுற்ற நிலையில் பல்வேறு வகையான கடன் தள்ளுபடி திட்டத்தின் காரணமாக தணிக்கை அறிக்கை வெளியிடாமல் இருந்து வருகிறது. 

இதனால் சங்கங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கு இடையூறாக உள்ளது. 
எனவே இறுதி தணிக்கை அறிக்கை காலதாமதமின்றி வெளியிட வேண்டும். பணியாளர்கள் பதவி உயர்வு ஏதுமின்றி ஒரே பணிநிலையில் பல ஆணடுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.  

பணியாளர்களை காலதாமதமின்றி பணிவரன்முறைப்படுத்தி உரிய பதவி உயர்வை வழங்கிட வேண்டும். 

விற்பனையாளர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை ஊதியம் வழங்குவதில் தெளிவான உத்தரவு இல்லாததால் பல மாவட்டங்களில் ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து தக்க தெளிவுரைகள் வழங்கவேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தொடர் வேலை நிறுத்தம்

அப்போது நிர்வாகிகள் கூறுகையில், கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகிற 5-ந் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறுவு கடன் சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பொது வினியோக திட்ட விற்பனையாளர்கள தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Next Story