மார்கழி திருவாதிரை: சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
மார்கழி திருவாதிரையை முன்னிட்டு சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குத்தாலம்:-
மார்கழி திருவாதிரையை முன்னிட்டு சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குத்தாலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நடராஜ பெருமான் 8½ அடி உயரத்தில் நர்த்தன சுந்தர நடராஜராக அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் கடந்த 17-ந் தேதி திருவாதிரை திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று திருவாதிரை திருநாளை முன்னிட்டு அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடந்தது.
அதிகாலை 3 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு தேகசவுந்தரி அம்மன் உடனாகிய நர்த்தன சுந்தர நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க மகாதீபாராதனை நடந்தது. பூஜைகளை சதாசிவ குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோனேரிராஜபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கோவில் வளாகம் மற்றும் ஊராட்சி பகுதிகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு இருந்தன.
திருவெண்காடு
திருவெண்காடு அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள கேதுபகவான் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், தலைமை அர்ச்சகர் பட்டு சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் சீர்காழி சட்டைநாதர் கோவில், சொர்ணபுரம் காத்திருப்பு சொர்ணபுரீஸ்வரர் கோவில், ஆச்சாள்புரம் சிவலோகநாதர் கோவில், திருப்புங்கூர் சிவன் கோவில், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோவில், சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலங்குடி கச்சபரமேஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடி கிராமத்தில் காமேஸ்வரி அம்மன் சமேத கச்சபரமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மார்கழி திருவாதிரையை முன்னிட்டு நேற்று அதிகாலை சுவாமி, அம்பாள் மற்றும் சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமானுக்கு பால், சந்தனம், தயிர், திரவியப்பொடி, இளநீர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது.
இதையடுத்து நடராஜ பெருமான் பிரகார உலா நடந்தது. அப்போது சாமியை பெண்கள் தங்களுடைய தோளில் சுமந்து கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தனர். கோவில்களில் ஆண்கள் மட்டுமே சாமியை சுமந்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில் இக்கோவிலில் பெண்கள் சாமியை தூக்கி வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story