நஞ்சப்பசத்திரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க விடுபட்டவர்களை கணக்கெடுக்க வேண்டும்


நஞ்சப்பசத்திரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க விடுபட்டவர்களை கணக்கெடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Dec 2021 8:19 PM IST (Updated: 20 Dec 2021 8:19 PM IST)
t-max-icont-min-icon

நஞ்சப்பசத்திரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க விடுபட்டவர்களை கணக்கெடுக்க வேண்டும்

ஊட்டி

நஞ்சப்பசத்திரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க விடுபட்டவர்களை கணக்கெடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். 

குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராம பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் பெற விடுபட்டவர்களை கணக்கெடுக்க கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- 

கணக்கெடுக்கும் பணி 

வண்டிசோலை ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பசத்திரத்தில் கடந்த வாரம் அரசு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி நடந்தது. அதில் சில குடும்பங்கள் கணக்கெடுப்பில் விடுபட்டு உள்ளது. விடு பட்ட அந்த குடும்பங்களின் நலனையும் கருத்தில் கொண்டு விவரங்களை கணக்கெடுக்க வேண்டும். 

தமிழக அரசு அறிவிக்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்காததால் ஊர்மக்கள் இரு பிரிவாகும் நிலை உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

உரிய அங்கீகாரம்

சேரங்கோடு உள்ளாட்சி பிரதிநிதிகள் கொடுத்த மனுவில், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சேரங்கோடு ஊராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எங்களுக்கு சேரங்கோடு ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். எங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

வீடு, வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள், முதியோர் ஓய்வூதியம் உள்பட 189 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.


Next Story