ஊட்டி பவானீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
ஊட்டி பவானீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
ஊட்டி
ஊட்டி பவானீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. தோடர் இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடினர்.
ஆருத்ரா தரிசன விழா
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஊட்டி பெர்ன்ஹில் பவானீஸ்வரர் கோவிலில் 110-ம் ஆண்டு ஆருத்ரா தரிசன மகோற்சவ விழா நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு கணபதி, சூரிய பகவான் பூஜையுடன் தொடங்கியது.
மதியம் 2 மணிக்கு நடராஜர் அபிஷேகம், சிறப்பு ஹோமம், மாலை 4.30 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் திருத்தேர் அலங்கரிக்கப்பட்டது.
தேரோட்டம்
காலை 6 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. தேரில் பவானீஸ்வரர், பவானி அம்மாள், சிவகாம சுந்தரேஸ்வரி அம்மாளுடன் நடராஜ மூர்த்தி எழுந்தருளினார். கோவிலை நடத்தி வரும் தோடர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து தேரை இழுத்தனர்.
கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு பெர்ன்ஹில் ரவுண்டானா, மரவியல் பூங்கா, ஊட்டி மத்திய பஸ் நிலையம், மெயின் பஜார், ஐந்து லாந்தர், கமர் சியல் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது. ஆங் காங்கே தேர் நிறுத்தப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் நடராஜமூர்த்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பாரம்பரிய நடனம்
தொடர்ந்து தேர் மாரியம்மன் கோவில் முன்பு வந்தது. அப்போது கோவில் பூசாரிகள் சிறப்பு பூஜை செய்தனர். தோடர் இன ஆண்கள் ஐந்து லாந்தர் பகுதியில் தங்களது பாரம்பரிய நடனம் ஆடினர். அப்போது அவர்களது மொழியில் பாடல்களை பாடியபடி பாரம்பரிய உடை அணிந்து இருந்தனர்.
வட்ட வடிவில் அனைவரும் கைகோர்த்தபடி நடனம் ஆடியதை காணமுடிந்தது. பின்னர் தேரோட்டம் வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது. தேரோட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருக்கல்யாணம்
அதேபோல் ஊட்டி காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று முன் தினம் மாலை திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அலங்காரத்தில் விஸ்வநாதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் மற்ற சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
Related Tags :
Next Story