வாலிபருக்கு ரூ.39 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
வாலிபருக்கு 39 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
கோவை
அரசு பஸ் மோதியதால் உடல் உறுப்புகள் செயல் இழந்த வாலிபருக்கு ரூ.39 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.
அரசு பஸ் மோதியது
ஈரோடு மாவட்டம் பவானிசாகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 59). அவருடைய மகன் அருண் சாமுவேல் (30).
இவர்கள் அன்னூர்- கோவை ரோடு கணேசபுரம் பண்ணாரியம்மன் மில் அருகே கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 3-ந் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த அரசு போக்குவரத்துக்கழக பஸ் மோதியதில் தமிழ்செல்வியின் கழுத்து வலதுபுற எலும்பு முறிவு ஏற்பட்டது. அருண் சாமுவேலுக்கு மூளை, இடதுகை மணிக்கட்டுக்கு மேல் பகுதி, கழுத்து, மார்பின் விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டது.
விபத்து நடந்தபோது, அருண் சாமுவேல் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக மாதம் ரூ.15 ஆயிரம் வருமானம் ஈட்டி வந்துள்ளார்.
விபத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, எதிர்கால வாழ்க்கை பாதிப்புக் காக ரூ.73 லட்சம் வழங்க வேண்டும் என்று
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
46 சதவீதம் ஊனம்
அதை விசாரித்த நீதிபதி கே.முனிராஜா பிறப்பித்த உத்தரவில் கூறப் பட்டு இருப்பதாவது
அரசு பஸ் ஓட்டுனரின் கவனக்குறைவு, அஜாக்கிரதை, அதிவேகம் ஆகியவற்றால் மட்டுமே விபத்து ஏற்பட்டுள்ளது உறுதியாகிறது.
எனவே, தமிழ்ச்செல்வியின் வலி, வேதனை, மருத்துவ செலவுகளுக்கு இழப்பீ டாக ரூ.1.56 லட்சத்தை 7.5 சதவீத வட்டியுடன் அளிக்க வேண்டும்.
விபத்தால் ஏற்பட்ட பாதிப்பால் அதிக நேரம் நிற்கவோ, நடக்கவோ, இயற்கை உபாதைகளை போன்ற அத்தியாவசிய பணிகளை செய்ய முடியாத அளவுக்கு உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் அருண்சாமுவேல் உள்ளார்.
மருத்துவ குழு அளித்த ஊனச்சான்றில் அவருக்கு 46 சதவீதம் ஊனம் ஏற்பட்டு உள்ளதாக சான்றளிக்கப்பட்டு உள்ளது.
ரூ.39 லட்சம் இழப்பீடு
மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், நரம்பியல் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்திருந்தபோதும் அவருக்கு தகுந்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கக்கூடிய நிலையை இழந்து, அவருடைய திருமண எதிர்பார்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவரின் வருவாய் இழப்பு, திருமண எதிர்பார்ப்பு இழப்பு, மருத்துவ செலவினம், வலி, வேதனை ஆகியவற்றுக்கு இழப்பீடாக ரூ.39 லட்சத்தை 7.5 வட்டியுடன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story