முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு கும்கி பயிற்சி


முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு கும்கி பயிற்சி
x
தினத்தந்தி 20 Dec 2021 8:30 PM IST (Updated: 20 Dec 2021 8:30 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு கும்கி பயிற்சி

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டது.

வளர்ப்பு யானைகள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் முகாம்களில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகிறது. இதில் வசிம், பொம்மன், விஜய், சுஜய் இந்தர், உதயன் உள்ளிட்ட 16 யானைகள் கும்கி பயிற்சி பெற்றுள்ளது. 

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுதல் அல்லது பிடிக்கும் பணியில் ஈடுபடுதல், வனப்பகுதியில் ரோந்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் பயிற்சி பெற்ற கும்கி யானைகள் ஈடுபடுத்தப் படுகிறது. 

கும்கி பயிற்சி

இதற்கிடையே சிறப்பாகப் பணியாற்றும் வகையில் கிருஷ்ணா, கிரி உள்ளிட்ட வளர்ப்பு யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கும்கி பயிற்சி பெற்ற சீனியர் யானைகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

காட்டு யானைகளை பிடித்தல், அதை தாக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது, காட்டு யானைகளை லாரிகளில் ஏற்றுவது, அதை கூண்டில் அடைப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இப்பயிற்சியில் பாகன்களின் உத்தரவை வளர்ப்பு யானைகள் பின்பற்றுகிறது.

ஒரு மாதம் 

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வளர்ப்பு யானைகளுக்கு தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். இது வழக்கமான நடை முறையில் உள்ளது. மீதமுள்ள நேரம் வனப்பகுதியில் ரோந்து செல்லப்படும். தொடர்ந்து ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு சிறப்பாக செயல்படும் யானைகள் கும்கியாக மாற்றப்படும் என்றனர். 


Next Story