ராணிப்பேட்டை மாவட்டம் தடுப்பூசி செலுத்துவதில் தொடர்ந்து கடைசி இடத்திலேயே இருந்து வருகிறது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேதனை
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ராணிப்பேட்டை மாவட்டம் தொடர்ந்து கடைசி இடத்திலேயே இருந்து வருவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ராணிப்பேட்டை மாவட்டம் தொடர்ந்து கடைசி இடத்திலேயே இருந்து வருவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறைகளின் நிலுவை பணிகள் மற்றும் முன்னேற்றம் குறித்து வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை விரைவாக கண்டறிந்து அவற்றை இடிக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பழுதான கட்டிடங்கலுக்கு அருகில் மாணவ - மாணவிகள் செல்லாமல் இருக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 வாரங்களுக்கு முன்னதாகவே பழுதடைந்த கட்டிடங்களை கண்டறியும் பணிகளை செய்து தற்போது பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோன்று பள்ளிகளில் படிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ - மாணவியர்களின் குடும்ப சூழ்நிலையை தெரிந்து அவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் எண்ணற்ற திட்டங்கள் அவர்களை சென்று சேர ஆசிரியர்கள் தாமாக முன்வந்து உதவ வேண்டும். ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இத்திட்டங்கள் மூலம் பயன் பெறுவதை விட்டுவிடுகின்றனர். இதன் மீது தனி கவனம் செலுத்தி அறிவுரைகளை வழங்க வேண்டும்.
இருளர் இன மக்களுக்கு வீடு
இருளர் இன மக்களுக்கு தற்போது ஆதார் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, ரேஷன் அட்டை போன்றவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அவர்களுக்கான வீடு வழங்க இடமும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் இடங்களைக் கொண்டு விரைவாக வீடுகள் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கான திட்டத்தை பூர்த்தி செய்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வீடு இல்லாதவர்களுக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்தி முடிக்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டம் பணிகளை முடிப்பதில் முன்னிலையில் இருந்து வருகிறது. விரைவாக முடித்தால் முதல் நிலைக்கு செல்லலாம். ஆகவே வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இதன் மீது தனிக்கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும்.
கடைசி இடம்
கொரோனா தடுப்பூசி செலுத்துவது கடந்த வாரம் மிக குறைந்த அளவே இலக்கினை அடைந்து உள்ளோம். 5 ஊராட்சிகள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி உள்ளது. 65 ஊராட்சிகள் முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதம் செலுத்தியுள்ளது. அவர்களையும் 100 சதவீதம் செலுத்திக் கொள்ள நடவடிக்கை விரைவுபடுத்த வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டம் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதில் கடைசி நிலையிலேயே இருந்து வருகிறது. இதனை புரிந்து கொண்டு அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் செயல்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை இணைந்து பணியாற்ற வேண்டும்.
மாவட்ட வழங்கல் துறை மூலம் ரேஷன் கடைகளில் விற்பனையாகும் அரிசிகள் வெளி மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுக்கும் பறக்கும் படையின் பணிகளை மேலும் அதிகரிக்க வேண்டும். அதிக அளவு அரிசி கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களை நியமித்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story