தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில் ஒடிசா, உத்தரபிரதேச அணிகள் காலிறுதிக்கு தகுதி
கோவில்பட்டியில் நடந்து வரும் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில் ஒடிசா, உத்தரபிரதேச அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நடந்து வரும் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில் ஒடிசா, உத்தரபிரதசே அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
ஆக்கி போட்டி
கோவில்பட்டி கிருஷ்ணாநகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் 11-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான அணிகள் பங்கேற்று உள்ளன.
5-வது நாளான நேற்று முதலாவதாக நடந்த போட்டியில் மேற்கு வங்காளம், தெலுங்கானா அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் 2 அணிகளும் தலா 4 கோல்கள் அடித்து இருந்ததால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
காலிறுதிக்கு தகுதி
2-வது போட்டியில் கர்நாடகா அணி 7-0 என்ற கோல் கணக்கில் ஆந்திரா அணியை பந்தாடியது. 3-வது போட்டியில் மராட்டிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தியது.
4-வது போட்டியில் ஒடிசா அணி 10-0 என்ற கோல் கணக்கில் சத்தீஷ்கர் அணியை அபாரமாக வீழ்த்தி கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து நடந்த போட்டியில் உத்தரபிரதேச அணி 12-3 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது.
இன்றைய ஆட்டங்கள்
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 மணிக்கு இமாசல பிரதேசம்- ஜம்மு காஷ்மீர் அணிகளும், 10.30 மணிக்கு டெல்லி- குஜராத் அணிகளும், மாலை 4 மணிக்கு மணிப்பூர்- புதுச்சேரி அணிகளும், 5.45 மணிக்கு ஜார்கண்ட்- கோவா அணிகளும், இரவு 7.30 மணிக்கு பீகார்- அசாம் அணிகளும் விளையாடுகின்றன.
Related Tags :
Next Story