தர்மபுரி மாவட்டம் முழுவதும் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா திரளான பக்தர்கள் வழிபாடு
தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
ஆருத்ரா தரிசன விழா
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தங்க கவசம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு அதிகாலை முதல் அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு உபகார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடராஜ பெருமானும், சிவசுப்பிரமணிய சாமியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சாமி திருவீதி உலா நடைபெற்றது. பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோல் தர்மபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், சவுளுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தீர்த்தமலை
காரிமங்கலம் மலையிலுள்ள அருணேஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், பாரதிபுரம் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது.
Related Tags :
Next Story