வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது


வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Dec 2021 9:58 PM IST (Updated: 20 Dec 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைதானார். அவர் 6 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கி உள்ளார்.

பொள்ளாச்சி

இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைதானார். அவர் 6 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கி உள்ளார். 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கற்பழித்து கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் பட்டுராஜன். இவரது மகள் சசிகலா(வயது24). மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு, அங்கு வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த வினோத்(28) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இதற்கிடையில் சசிகலாவிற்கு, அவரது உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் மூலம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதை அறிந்த வினோத், அவரை தனியாக பேச அழைத்து சென்று கற்பழித்து கொலை செய்தார்.

தேடப்படும் குற்றவாளி

இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொள்ளாச்சி மகளிர் போலீசார் வினோத்தை கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு வினோத் ஆஜராகி வந்தார். 

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந்தேதி முதல் வழக்கில் ஆஜராகாமல் அவர் தலைமறைவானர். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்தது. மேலும் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட்டது. 

ஆதார் எண் மூலம் ஆய்வு

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையில் போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி மேற்பார்வையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், போலீஸ்காரர் கணேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

தனிப்படை போலீசார் வினோத்தின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் வினோத்தின் ஆதார் கார்டு எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். 

சிக்கினார்

அப்போது அவர் ஆதார் கார்டை வைத்து சேலத்தில் வங்கி கணக்கு தொடங்கியது தெரியவந்தது. இதை வைத்து வங்கி கணக்கிற்கு யார், யார்? பணம் செலுத்தி உள்ளனர் என்பது குறித்த விவரத்தை போலீசார் சேகரித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஈரோடு சென்று பிறகு திருப்பூரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் அவர் வேலை பார்ப்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அங்கு சென்று வினோத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபரை பிடித்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.


Next Story