சேவல் திருடியதை தட்டிக்கேட்ட வாலிபர் கத்தியால் குத்திக்கொலை


சேவல் திருடியதை தட்டிக்கேட்ட வாலிபர் கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 20 Dec 2021 10:05 PM IST (Updated: 20 Dec 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

சேவல் திருடியதை தட்டிக்கேட்ட வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

மங்கலம்,
மங்கலம் அருகே சேவல் திருடியதை தட்டிக்கேட்ட வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புதரில் வாலிபர் பிணம்
திருப்பூர் அருகே சாமளாபுரம் பேரூராட்சி கருகம்பாளையம் பகுதியில் உள்ள முட்புதரில் 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று அதிகாலை பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சே்ாந்த தங்கபாண்டி, அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் மங்கலம் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், மங்கலம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரது மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது. கை வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதையடுத்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கத்தியால் குத்திக்கொலை
இது குறித்து போலீசார் தங்கபாண்டி, அவரது மனைவி மகாலட்சுமியிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்களது மகன் பிரேம்குமார்தான் அந்த வாலிபரை கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. 
கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் திருப்பூர் மாவட்டம், கோம்பக்காட்டுபுதூரை சேர்ந்த மணிகண்டன் மகன் கார்த்திக் (22) என்பதும் தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. 
கார்த்திக் சேவல்கள் வளர்த்து வந்துள்ளார். இவருடைய சேவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இந்த நிலையில் காணாமல் போன சேவல் பிரேம்குமாரின் வீட்டில் இருப்பதாக கார்த்திக்குக்கு தெரியவந்தது. 
இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு கார்த்திக் கருகம்பாளையத்தில் உள்ள பிரேம்குமாரின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
பின்னர் போதையில் இருந்த பிரேம்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கை மார்பில் குத்தியதுடன், கையை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் பிரேம்குமார் தனது வீட்டின் அருகே உள்ள முட்புதரில் கார்த்திக்கின் உடலை வீசியுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெற்றோருடன் வாலிபர் கைது
இதைத் தொடர்ந்து வீட்டின் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர். 
மேலும் கொலையை மறைக்க முயன்ற பிரேம்குமாரின் பெற்றோர் தங்கபாண்டி, மகாலட்சுமியையும் மங்கலம் போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கில் கைதான பிரேம்குமார் மீது ஏற்கனவே அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு  இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story