பாச்சலூரில் தீயில் கருகி பள்ளி மாணவி இறந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்; கலெக்டரிடம் கோரிக்கை


பாச்சலூரில் தீயில் கருகி பள்ளி மாணவி இறந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்; கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2021 10:20 PM IST (Updated: 20 Dec 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

பாச்சலூரில் தீயில் கருகி பள்ளி மாணவி இறந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கலெக்டரிடம், இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல்:
பாச்சலூரில் தீயில் கருகி பள்ளி மாணவி இறந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கலெக்டரிடம், இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பாச்சலூர் அரசு பள்ளி மாணவி பிரித்திகா தீயில் கருகி இறந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.
மேலும் இந்த பிரச்சினையில் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இறந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜல்லிக்கட்டு
அதையடுத்து திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் தோட்டனூத்து மாரியம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதேபோல் இந்த ஆண்டும் பங்குனி மாத திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வடமதுரையை சேர்ந்த வக்கீல் தேவேந்திரன் என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும். மேலும் பழனிக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு கூடுதல் நுழைவு கட்டணம் வசூலிக்கும் குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் குத்தகை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. .
கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சிலம்பரசன் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் சிறுமலை பிரிவு அருகே சூழல் மேம்பாட்டு குழு மூலம் சிறுமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு வன பாதுகாப்பு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 323 மனுக்கள் கலெக்டரிடம் கொடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கலெக்டர் காரை மறிக்க முயன்ற மாணவி
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கலெக்டர் விசாகன் நேற்று காலையில் காரில் கலெக்டர் அலுவலகம் வந்தார். கலெக்டர் அலுவலகம் முன்பு அவருடைய கார் வந்ததும் ஒரு மாணவி ஓடிவந்து காரை மறிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார் அந்த மாணவியை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கலெக்டர் காரை மறிக்க முயன்றது குஜிலியம்பாறை அருகே உள்ள கோட்டாநத்தத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முனியப்பன் என்பவரின் மகள் இந்திராணி என்பதும், பிளஸ்-2 மாணவி என்பதும் தெரியவந்தது.
மேலும் மாணவியின் தந்தைக்கு சொந்தமான நிலத்துக்கு 20 ஆண்டுகளாக பட்டா, மின் இணைப்பு கிடைக்கவில்லை. இரவில் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் காரணமாகவே கலெக்டர் காரை மறித்து மனு கொடுக்க முடிவு செய்த மாணவி தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தது தெரிந்தது. பின்னர் அந்த மாணவியை எச்சரிக்கை செய்த போலீசார், கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story