அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது புதிய சந்தனம் பூசப்பட்டது


அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது புதிய சந்தனம் பூசப்பட்டது
x
தினத்தந்தி 20 Dec 2021 10:24 PM IST (Updated: 20 Dec 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலில் அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது ஆருத்ரா தரிசனத்தையொட்டி புதிய சந்தனம் பூசப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலில் அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது ஆருத்ரா தரிசனத்தையொட்டி புதிய சந்தனம் பூசப்பட்டது.
அற்புத நிகழ்ச்சி
ராமநாதபுரத்தை அடுத்துள்ள புகழ்வாய்ந்த திருஉத்தர கோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று முன்தினம் அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டு இருந்த சந்தனம் களையும் அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது. 
சிறப்பான மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம். 27 நட்சத்திரங்களில் திருவோணம், திருவாதிரை ஆகிய 2 நட்சத்திரங்களுக்கு மட்டும் தான் திரு என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு மிக்க திருவாதரை நாள் சிவனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இதன்படி திருவாதிரை நாளான நேற்று முன்தினம் ஆருத்ரா தரிசனத்தையொட்டி காலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேக ஆராதனை களுக்கு பின்னர் பச்சை மரகத நடராஜர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அருள்பாலித்தார்.
மகா அபிஷேகம்
 இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. இதன்பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் அருணோதய காலத்தில் அபூர்வ பச்சை மரகத நடராஜர் திருமேனி மீது புதிய சுத்தமான சந்தனம் பூசப்பட்டது. 
பச்சை மரகத நடராஜர் சிலை முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நன்கு அரைக்கப்பட்ட சந்தனம் மென்மையாக பூசி வைக்கப்பட்டது. இதன்பின்னர் மரகத நடராஜருக்கு ஆருத்ரா சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. மரகத நடராஜர் பல்வேறு வண்ண மலர்களால் அலங் கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சிஅளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நின்று நடராஜரை தரிசனம் செய்தனர்.
பஞ்சமூர்த்தி புறப்பாடு
விழாவையொட்டி கோவிலில் கூத்தர் பெருமாள் திருவீதி உலாவும், மாலை பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை களும் நடைபெற்றன. இரவு 9 மணிக்கு மாணிக்க வாச சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து சிறப்பு நாதஸ் வரத்தோடு பஞ்சமூர்த்தி புறப்பாடு வெள்ளி ரிஷப சேவை நடைபெற்றது. 
சிவனுக்கு உகந்தநாளாக கருதப்படும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரை தரிசிப்பது விஷேசம் என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர். 
ஏற்பாடு
ஆருத்ரா தரிசனத்திற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story